செவ்வாய், பிப்ரவரி 23, 2016

போலச் சிரிக்குமொரு வாழ்வு

இவ்வளவுதான் என்பது
எவ்வளவு உண்மையோ
அவ்வளவு உண்மை
இவ்வளவு மட்டுமில்லை என்பதும்
*******************************************************
இறுகமூடிய பிஞ்சுவிரல்களுக்குள்
இருப்பதான பாவனையில் 
மலரவிழும் போதில்
மணப்பதான பாவனையில்
அன்பையும் வைத்திரு
போலச்சிரிக்குமொரு வாழ்வு
******************************************

வலியினடியில்
மிதக்கும் சிரிப்பைத் துழவிக்கொண்டு 
வலியின் கரையோரத்தில்
கதைபேசிக்கொண்டு
எது நீ
எது நான்
******************************************
நீங்கள் சொன்ன பெயர்
மரத்தினுடையதா
பசிய ஒளியோடு
ஆடிக்கொண்டிருந்து விட்டு
இதோ இக்கணம்
உதிரும் இலை
உதிர்த்த கிளை
இரண்டுக்கும் இடையே
இழுபடுவதா
அதனடியில் துளிர்த்துக்
கொண்டிருக்கும் தளிர்
காம்பைப்பற்றியபடி
தன்னுடையது என்றல்லவா சிரிக்கிறது




கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...