புதன், அக்டோபர் 09, 2019

காகித விசிறிகள்



மஞ்சள் சுண்ணாம்பு உதிர்ந்த காரை
ஒழுகும் கூரை அடியில்
சத்துணவு உண்டுவிட்டு
பெயர்ந்த சிமெண்டுக் குழியில்
இலவச சீருடை மாட்டிக் கிழியாது
பக்குவமாய் உட்காரக் கற்றுவிட்டான்
மூணாம்ப்பு ரமேசு
மறந்துபோய் அவ்வப்போது
விரல் சூப்பும் நினைவு வந்துவிடும்
கீதா டீச்சர் முறைத்தபின்
நெளிந்தபடி டவுசரில் துடைத்துக் கொள்வான்
வயிற்றில் இருந்தபோதே
ஆங்கிலத்தில்தான் செல்லம் கொஞ்சுவாள்
தினேஷின் அம்மா.
ஆங்கிலப் பாலூட்டி,ஆங்கிலத்தில் தாலாட்டி,
ஆங்கிலத்தில் மூச்சுவிட்டு
ஆங்கிலமாகவே வளர்கிறான் தினேஷ்
அவன் பள்ளியோ ஆங்கில செங்கற்களால்
கட்டப்பட்டது
அவன் சரஸ்வதியே ஆங்கிலப் பாட்டுதான்
கேட்பாள்
அவன் படிப்பது தேர்ட் ஸ்டாண்டர்ட்
**************************************************
மூணாம்ப்பு ரமேசுக்கும்
தேர்ட் ஸ்டாண்டர்ட் தினேஷுக்கும்
நாளை பொதுத் தேர்வு
நாங்கள் நியாயமானவர்கள்
எல்லோரையும் சமமாக நடத்துபவர்கள்
சமமான தேர்வு வைப்போம்
நாடு சமமாகும்
மூணாம்ப்பில் சமத்தை நிலைநாட்ட
முடியாவிடில்
இருக்கவே இருக்கிறது அஞ்சாம்ப்பு
அதையும் தாண்டி வா
எட்டாம்ப்பில் இருக்கு உனக்கு
போதும் போதும்
நீங்கள் படித்தது
சேற்றில் இறங்கவும் ஆளில்லை
சோற்றைப் பொங்கவும் ஆளில்லை
இந்தி இறங்காத நாக்கோடு
இட ஒதுக்கீடு கேட்பாயோ
ஒதுங்கிப்போ குலத் தொழிலோடு
நீ
விரல் நீட்டவேண்டியது
வாக்குச் சீட்டின் அடையாள மை
வைக்க மட்டுமே
*******************************************
இத்தனை வன்மம் கொட்டும்
கல்விக் கொள்கைக் காகிதங்களால்
எஜமானர்களுக்கு விசிறும் அடிமைகளே
ஒருநிமிடம் குனிந்து பாருங்கள்
உங்கள் காலில் மிதிபட்டுக் கிடப்பது
உங்கள் குழந்தைகள்தான்
எப்போது கண் திறப்பீர்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...