தேநீர்க்கடையின்
பண்பலைப்பாடலையோ,
தேநீரையோ-சிலாகித்தபடி
நீங்கள் கூடியிருக்கையில்
மௌனமாகச் சில்லறை தந்து
விலகிப்போகும்
அவனும் ஒரு பாடலாசிரியன் என
உங்களுக்குத் தெரியாது ..
அவன் தெரிவிப்பதுமில்லை...
மிகுந்த பிரயாசையோடு
அவன் எழுதிய வரிகளை
கருவிகள் விழுங்கியதை -
அவன் பொறுத்துக் கொண்டான்
வெற்றிக்குப்பின்னான
ஒரு நேர்முகத்தில்
தான் தாண்டியதான சவால்களில்
சொல்லிக்கொள்ளலாம் என்று...!
எவர் பெயரும் போடாது
ஏதோ ஒரு படத்தின் பின்னொட்டாய்
வந்த பாடலை
நூறாய் அழுத்தும் கள்ளத்தகடுகளும்
ஏந்தவில்லை...
அவன் எழுதிய அந்த ஒற்றைப்பாடலை
பெயர் சொல்லாமல் யாரேனும்
முணுமுணுத்தால் கூடப் போதும்.
யாரோ போல் இவனே கேட்டும்
இருப்பில் இல்லாததாய்
வானொலிகளும் மறுத்துவிட்ட
அவன் பாடலை நீங்கள்
அறிவீர்களா?
4 கருத்துகள்:
நல்லதொரு சிந்தனை வரிகள் சகோ... நன்றி...
மிக்க நன்றி தோழர்
சபாஷ் சக்தி.
ஒவ்வொரு வார்த்தையிலும் உறைந்து கிடக்கிறது நிராகரிப்பின் குருதி.
குறுகிய இடைவெளியில் மற்றுமொரு அருமையான கவிதை.
மிக்க நன்றி சுந்தர்ஜி.
உண்மைதான்...நிராகரிப்பின் குருதி வழிய வழிய
மெளனமாக விலகும் திறனாளிகளின் ரணங்கள்
சகிக்க முடியாதிருக்கிறது...
கருத்துரையிடுக