புதன், டிசம்பர் 30, 2015

இயல்புநிலை


எல்லாம் சரியாகிவருகிறது
என்ன 
அடுப்பு ஏற்ற வாய்க்கவில்லை
இன்னும் பொட்டலங்கள் வேண்டியிருக்கிறது
கும்பி அடங்க
இன்னும் யாரோ தரும் ஆடைகளில்
மானம் காத்துக் கொள்கிறோம்
கூரை எங்களுடையது போல இல்லை
பள்ளிகளில்
அலறித்தவித்து
வெளியேறிய நேரத்தின் பாதைகள்
சூழ்ந்திருந்த நீர்
எங்கள்
கைரேகைகளையும் அழித்திருப்பதைத் தவிர
எல்லாம் சரியாகி வருகிறது
மழை ,ஆறு,ஏரி,குளம்,தண்ணீர்
இதெல்லாம் கேட்ட மாத்திரம்
நடுங்க வைத்த கெட்ட வார்த்தைகளாக
இருந்தது மாறி
பாரம்பரிய கெட்ட வார்த்தைகளைக்
கண்டுகொள்ள முடிவதால்
இயல்புநிலை
திரும்பித்தான் விட்டது போலும்
வாசலில் குழையும் சொறிநாய்க்கு
ஒருவாய் போட்டால் மட்டுமே
சோறுண்ணும் பழக்கமுள்ள
கைப்பிள்ளைக்குத்தான்
எப்படிப் புரிய வைப்பது
வாசலுமில்லை
நாயுமில்லை
சோறுமில்லை என்ற
இந்த இயல்பு நிலையை

கீற்று இணைய இதழில் 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...