புதன், ஜனவரி 06, 2016

டிசம்பர் பூக்கள் -2



புன்னகையைப் பார்த்தால்
பதிலுக்குப் புன்னகைக்கவும் இயலாத
சுவர் கல்லிடம் 
பகிருமோ வருத்தம்
********************************

பூவேலை சித்திரங்களோடு
பளிச்சென்ற நிறக்கலவையில்
ஊர்ந்து செல்கிறது
அமரர் ரதம்.
பணி முடிந்தது.
*************************************
கேட்காத பொழுதுகளிலும்
இசை ஒலித்துக்கொண்டே
இருக்கிறது
கேட்பதான பாவனைகளின் சுமையற்று
*****************************************
மறதியை நம்பியிருக்கிறது
காதல்
மறதியை நம்பியிருக்கிறது
பாசம்
மறதியை நம்பியிருக்கிறது
அன்பு
மறதியை நம்பியிருக்கிறது
அரசியல்
மறதியை நம்பியிருக்கிறது
கோபம்
நீ ஏன் நினைவாற்றல் பற்றிக் கவலை கொள்கிறாய்
மறக்கத்தெரிந்தால்
பிழைக்கத்தெரிந்தது போல்தான்
***********************************************
அவசரமாக செல்லவேண்டியிருக்கிறது
சின்னதுதானே என்று சொல்லிவைத்த
பொய்
பொய்தானென்று
நீ கண்டுவிட்டாயோ
இல்லைதானென்றால்
சொல்லித்தொலை
இன்னும் உனக்குப் புலப்படவில்லையென
********************************************
பார்த்தேன்
பார்த்தேன்
பின்னும் பார்த்தேன்
ஒன்றுமில்லை
நீ பார்த்த 
அதுவே என்று
ஒப்புக்கொண்டு நகர்ந்தேன்
நிம்மதி
உனக்கென்று தோன்றினாலும்...
பின்னும் பார்ப்பேன்
நீ
பாரா கணத்தில்
************************************
காற்றின் எதிர்த்திசையில்
புறப்பட்டது
ஒளிக்கீற்று
குவிந்தகரங்கள் காக்க
**********************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...