வியாழன், ஜனவரி 07, 2016

துரத்தும் திரவம்


தொட்டி நிரம்பி நீர்வழியத்
தொடங்கியிருந்தது
நீர்த்தாரை எத்தனை அழகு
எத்தனை உயிர்ப்பு
என்னவோ எங்குவிழும்சொட்டும்
கையிலேந்த அழைக்கும்
குவளையால் செடிகளுக்கு
வார்த்தபோதும்
வாய்க்கால்வழி வரப்புவழி
பயிர்நனைத்தபோதும்
ஒவ்வொரு துளியின்சலனமும்
என்வழி உயிர்வளர்ப்பதான பெருமை
தும்பைமேல் வீற்றிருந்த துளியை
மெல்லஇடறிவிட்டுப்போகையில்
யாதொரு குற்றமும் இருந்ததில்லை
வழியும்நீர்
அழிவின்நிழல் போல்
ஆயிரம்ஆயிரம் கிளைகொண்டு
பெருகிப்படர்ந்து
அச்சத்தின் சிறையில் தள்ளுகிறது
இனிஒருநாளும்
செடிகளுக்கு நீர்வார்த்தல்
இனிய
மாலையின் நிகழ்வாயிருக்கப்
போவதில்லைஎனக்கு
விக்கித்து நிற்கும் கையிலிருந்து
நீர்க்குவளை வாங்கி
வார்க்கிறாள் கண்ணம்மா
நீர்கொண்டோடிய உறவின் முகங்கள்
நீரில் தெரியாதபடி
கண்ணை இறுக்கிக்கட்டிக்கொள்
என்னைப்போல் என்றபடி

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...