உருளைக்கிழங்கு துண்டுகளின் பிம்பம்


தும்பைச்செடிகளும் கீழாநெல்லியும்
ஓரமாய்ப்பெருகிக் கிடக்கும் ஒரு பாதையில்
நடந்து சென்றிருந்தோம்.
வராமல் கூட இருந்திருக்கலாம்
ஆனால்
படுபாடு பட்டு வந்தாயிற்று
திடீரென போய்ச் சேர்ந்து
புதிய சமையலொன்றைச் செய்யும்
அசௌகர்யம் தந்த குற்ற உணர்வோடு
கால்களைக் கழுவிய
அதே கிணற்றடி
உள்ளே கசகசத்த நெருக்கத்திலிருந்து
தப்பிக்க ஏற்ற பதுங்குகுழிதான்
சகடையில் இப்போது
டயர்களால் ஆன கயிறு
குறைந்தது நான்கு பண்டமில்லாமல்
இலைவிரிக்க மாட்டேன் எனத்
தூக்கிச் செருகிய சேலையும்
உடைந்த பற்களிடையே
வழிந்த புன்னகையுமாக
ஓடிக்கொண்டிருந்த அத்தைதான்
முன்வாசலில் நாற்காலியில்
சார்த்தப்பட்டிருக்கிறாள்
இந்த வீட்டின் நகரக்கிளையில்
உருளைக்கிழங்கைத் தோல்சீவி
சமைப்பதா ,அவித்து உரிப்பதா
எது சிக்கனம்
என்ற நீள் விவாதத்தின் பின்
சமைத்து பரிமாறப்பட்ட இரண்டே துண்டு
போல கிணற்றின் நீரலைவில் தெரிந்தது
திடுக்கிட்டுத் திரும்பியபோது
நீரிறைக்க வந்திருந்தாள் மருமகள்
அவள் கைகளின் நீட்சி போல


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை

மூக்குத்திப் பெண்கள்