செவ்வாய், நவம்பர் 08, 2016

இட்லி அரிசியும் சாப்பாட்டு அரிசியும்


நிறைநாழி நெல் முந்தானையில் ஏந்திக்கொண்டுதான் 
உள்ளே நுழைந்தார்கள்
வாழவந்த பெண்கள்
மணையில் அமருமுன் கவனமாக
அடியில் நெல் பரப்பியே சமுக்காளம்
விரிப்பது மங்கலநிகழ்வுதோறும்
கொத்தான புதிர்நெல் எரவாணத்தில்
அடுத்த கொத்து வரும்வரை
உலர்ந்தாலும் உதிர்ந்தாலும் தொங்கும்
பத்தாயங்களின் வாசனையோடு
கோணிச்சாக்குகளின் உதறலோடு
மழையும் வெயிலும் முற்றத்தில் இறங்கின
இதெல்லாம் தொன்மமாகிவிட்ட வீடு இது
நேராக உட்கார்ந்தே அறியாத தலைவன்
சாய்வு நாற்காலியில்
அகன்ற திரை தொலைக்காட்சி பார்த்தபடி
நடவு,அறுப்பு என்று அலைந்துகொண்டிருந்த தலைவி
நல்லவேளை நமது நாலு ஏக்கரும்
பிரதான சாலையில் இருந்தது
என்று பெருமூச்சோடு ஆறுதல் அடைகிறாள்
நல்லவேளை நமது ஊருக்கு
கலெக்டர் ஆபீசும் கல்லூரியும் வந்தது
என்கிறாள் தாய்வீடு வந்திருக்கும்
இளைய மகள்
நல்லவேளை நீயும் அப்பாவும்
வயலை மனையாக்க சம்மதித்தீர்கள்
என்றாள் தாய்வீடு வந்திருக்கும்
மூத்தமகள் தலைதுவட்டியபடி
உங்கள் வாழ்வு அல்லவா
என்றபடி தானும் தலைதுவட்டத்
தொடங்கினாள் தலைவி
அவர்கள் அப்போதுதான் துக்கவீட்டிலிருந்து
திரும்பியிருந்தார்கள்
காய்ந்த வயல் பார்த்துக் கடனை நினைத்துப்
பாலிடால் பருகிய பங்காளி சாவு அது
"அம்மா என்ன வாங்கவேண்டும் "
பட்டணத்திலிருந்து வந்திருக்கும்
மகன் கேட்கிறான்
அரிசி வாங்கணும்பா
இட்லி அரிசியா சாப்பாட்டு அரிசியா
தலைவர் சற்றே திரும்பிப் பார்த்தார்
எரவாணத்தில் காய்ந்த புதிர் ஆடும்
இடத்தை

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...