செவ்வாய், ஆகஸ்ட் 14, 2018

வழிவிடாக் கிணறு



வழிவிடாக் கிணற்றடிகளிலிருந்து
தெருமுனை அடிபம்புகளில் 
குடத்தோடு நின்றே நசுங்கினாள்
ருக்கு பெரியம்மா
உரிமை 
முன்னுரிமை
சலுகை 
யாவும் 
குழாயடிச் சொற்களாகவே 
அறிந்திருந்தாள் ராசாத்தி அத்தை
அவரவர் வீடு அவரவர் குழாய் 
என்றொரு நாள் பிறந்தபோது 
விடுதலை தரிசித்தாள் பூமா சித்தி 
அதிலும் காற்று வந்து 
உறக்கம் கலைத்தது
இன்னும் இருக்கிறார்கள் 
எம் அக்காளும் தங்கையும் மகள்களும் 
இறங்கிய கர்ப்பப் பையையும் 
பொருட்படுத்தாது சிக்குநடை போடுவதும் 
வேலைக்குமுன் வீடுமுழுக்க 
கழுவவும் துப்பவும் நிரப்பி நிரப்பி 
பிளாஸ்டிக் குடம் கண்டவனை 
வாழ்த்தியபடியுமாக

இருபது லிட்டர் கேனில் கணக்கிடப்படும் 
நாளான வாழ்வில் 
வந்தவர்க்கெல்லாம் நீர்ச்சொம்பு தந்த 
மரபு மாற்றியாயிற்று 
நீங்கள் தண்ணீர் என்ற சொல்லுக்குப் 
பொருள் மாற்றியதுபோல

கூவிச் சலித்து 
ஓட்டமே நடையென 
இடந்தேடி தடந்தேடிக் 
குடங்கள் சுமப்பதே பொழுதாகிப் 
போனவளுக்கு 
ஒருகை நீரைச் சேர்ப்பிக்கவும் 
வக்கிலா வாழ்வில் 
பரந்த 
கடல் நீரின் உப்பு காட்சி குமட்டுகிறது
என்கை இறுகப் பற்றுகிறது 
தண்ணீர்ப் போத்தலை
உயிரோவியத்துக்கு நன்றி தோழர் Ravi Palette

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...