வெள்ளி, நவம்பர் 21, 2014

செவிபடாது மிதந்தலையும் கானம்




வரி சொல்வாய் 
கருவி சொல்வாய் 
எத்தனையாவது நொடியில் எந்தக் கருவி முடிந்து 
எது தொடங்கும் 
கூட எது இழையும் என்பதும் அறிவாய் 
குரல் எப்போது குழையும் 
எங்கே நிமிரும் 
முத்திரை விழுந்திருப்பது எங்கே 
சாயல் வேறெங்கு உண்டு எல்லாம் 
பிரித்துக் கலைத்து 
ஆறிய தேநீரோடு பாடலை அருந்திய 
நாட்களின் சாட்சியான 
தோப்புமில்லை

கடைக்கார வைத்தியும் காலமானார் 

ஒலிநாடாக்கள் சுழலவும் வழியில்லாது 
மரப்பெட்டியின் ஓரத்தில் 
தூசியோடு துயில 
பதிவகங்கள் தேவையிலா உலகில் 
தரவிறக்கும் தனியாளாக 
நீயும் நுட்பம் கற்றிருக்கலாம் 

ஏதோ ஒரு  வானொலியோ ,தொலைக்காட்சியோ 
வழங்கும் பாடலுக்குள் புகவியலாது 
மணல் மிதிக்கும் என் பாதங்களைப்போல் 
நீயும் உணர்வாயோ 

19 11 14 விகடன் சொல்வனம் பகுதியில் இடம்பெற்ற கவிதை 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...