புதன், ஆகஸ்ட் 17, 2016

எப்போதும்போல்

எப்போதும்போல் இருட்டுகிறது
எப்போதும்போலப் புலரும்
எப்போதும்போல ஓடுகிறீர்கள்
எப்போதும்போல உறங்கப்போகிறீர்கள்
வேடிக்கை பார்த்தபடி
விமர்சனம் செய்தபடி
புலம்பியபடி
புன்னகைத்தபடி
எப்போதும்போல எல்லாம்
நடக்கும் உலகத்தில்
எவருக்காவது
எப்போதும்போல் இல்லாமல்
ஆகிவிடுகிறது


*****************************************************
நேற்று என்பது இன்றாக இருந்தபோது
இன்றென்பது நாளையாக இருந்தது
உனது கண்மை தொட்டெழுதிய
இருள் கரிந்து வழிந்து
அந்தக்கணத்தைக் கடத்திவிட்ட
இப்போது
எதை நேற்றென்பது
எதை இன்றென்பது எனத்
திகைத்திருக்கிறேன்
யாரோ பின்னிருந்து இழுத்து
நாளை ?எனச் சிரிப்பது கேட்கிறது
அது நாளையேதானா

*******************************************************
எங்கிருந்தோ பார்த்துக்கொண்டிருக்கும்
எவருக்கானதோவான
வாழ்வில்
காய்தல் எது 
உவத்தல் எது
அச்சத்துக்கும் மரியாதைக்குமான
கோட்டை வரையுமுன்
மந்திரக்கோல்
நாலு தட்டு தட்டிவிடுகிறது


*************************************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...