நீல புத்தன்

பேசிக்கொண்டிருக்கப் பிரியப்படும்
மனிதர்கள் அருகிருக்கையில்
மௌனம் கொண்ட வாழ்வு
பேருந்தின் சன்னலோரக் காற்றில் முடிபறக்க
எவரோ போகும் காட்சி
ஏனோ தவிப்பைப் பெருக்குகிறது
ஓடிப்போய்த் தொற்றிக்கொள்ள
படி காட்டாப் பேருந்துகளல்லவா கடந்துகொண்டிருக்கின்றன

*********************************************************************
எப்படியாவது மாறிவிடும் என்று
நினைத்திருக்கிறீர்கள்
எப்படியாவது கைவிட்டுவிடலாம் என்று
காத்திருக்கிறீர்கள்
மாறுவதும் கைவிடுவதும் 
நீங்கள் செய்துமுடிக்க வல்லதல்ல
என்பதைப் புரிந்துகொள்ளும்போது
நீண்டபாதையின் தாழ்வாரங்கள்
ஒழுகத் தொடங்கிவிடுகின்றன
கதவுகளோ
இறுகத்தாழிட்டுத் துருவேறி

**********************************************************************
கையகப்படுத்தியதெல்லாம் வாழ்வின் துளியுமல்ல
ஏந்திய பசுங்கிளை
மெல்ல நகர்ந்தபோது அறியாய்
பிரம்மாண்ட வேர்பிடித்துவிட்ட
இத்தருணமே உணர்கிறாய்
நிலவின் கிரணங்களைப் பார்க்கலாம் அந்த வேரடியில்
கிடந்து
போதாதோ


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை

மூக்குத்திப் பெண்கள்