வியாழன், செப்டம்பர் 22, 2016

ஒற்றை நந்தியாவட்டை


கரங்கள் அதன் சிறகை வருடின
ஏந்திய பறவைக்கு காற்றை
அறிமுகம் செய்தபோது
மலர்ந்தவைதான் சூழ்ந்திருக்கும் இந்த வாடாமலர்கள்
சொந்தம் கொண்டாட எவர் வரினும்
பூத்த கணம் நித்தியமே
**************************************************************************
நிறைவேறா யோசனை
எழுத்தை விட்டுவிட்டு
எழுந்து பறந்துவிட்ட முத்துக்குமார்
காரணகாரியமில்லாது 
எவரையோ எவரோ 
செய்துகொண்டிருக்கும் அவமானம்
வலிகுறித்த தெளிவின்றி
நகர்ந்துசெல்லும் பெண்
விடைதரவியலாக் கேள்விகள்
துன்புறுத்தும் வரிசைக்கு
புதுவரவு 
தனித்தாடும் ஒற்றை நந்தியாவட்டை
**************************************************************
திடீரெனத் துவங்கும்
தூறல் எப்போதும்போல
சீரற்றே விழுகிறது
சீறல் போலக் கேட்கும் ஓசை
வயதின் எண்ணிக்கையை
சொல்லிவிட
யாருக்கும் கேட்குமுன்
துடைத்துவிட்டேன்
மூடும் சன்னலை எவர் கவனிக்காவிடினும்
வழிந்தோடும் மழை கவனிக்கத்தான் செய்கிறது
******************************************************************
என்னைப்போலவே நீயும்இருக்கிறாய்
உன்னைப்போலவே நானும்
கொந்தளிக்கும் கடலாக
தெறித்துவிழ இடம்தேர்வு செய்யா
நெருப்புக்குழம்பாக
சொற்களுக்காக உயிரைக்
கையளிக்கும் தத்தளிப்பாக
ஓட்டுக்குள் ஒடுங்கிய நத்தையாக
முகையவிழ அதிகாலையை
எதிர்பார்த்திருக்கும் கொடியாக
பருக்கையோ செத்த எலியோ
கைப்பற்றக் காத்திருக்கும் காக்கையாக....
இன்னபிறவாகவும்
என்னைப்போலவே நீயும்இருக்கிறாய்
ஒருபோது
அது ஒரேபோதாக இருக்கலாம்
இல்லாமலும் போகலாம்
என்னைப்போல்இருப்பதை
நீயும்
உன்னைப்போல் இருப்பதை
நானும்
உணராமலும் போகலாம்
போகவே.....

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...