வழிகாட்டப்பட்ட வண்ணத்துப்பூச்சி

வண்ணத்துப்பூச்சிக்கு வழிகாட்டுவதாக நினைத்து
பிடித்து பிடித்து விடுகிறீர்கள்
முதலில் வண்ணங்கள் ஒட்டிக்கொண்டன
பின்னர் சிறகுகளும்
இப்போது
பிடித்து பிடித்து விட வாகாக
இல்லையே என்பதுதான்
உங்கள் காருண்யக்கவலை


**********************************************************
உங்களை மிரட்டுவது எது
நடந்து பழகு
தனித்து நட
குனியாதிரு
வீணே பணியாதிரு 
எல்லாம் அறிவித்தீர்கள்
கற்றது கைக்கொள்ளும் போது
உங்களை மிரட்டுவது எது
நீங்கள் நீங்கலாக என்று
நினைத்தீர்களோ


*************************************************************
களிமண் பிசைந்த கையோடு பேத்தி தந்த
பிளாஸ்டிக் குவளைத் தேநீரை
உறிஞ்சிவிட்டு
அழுத்திய அச்சிலிருந்து
கடவுளை விடுவித்த கிழவி
இன்று மாலை
கடற்கரை வந்திருக்கமாட்டாள்

****************************************************************
ஒரேமாதிரியாக இருக்க ஆசைதான் நமக்கு
ஆனால் அவ்வப்போது
ஒருமாதிரியாக
இருக்கும்படி நேர்ந்துவிடுகிறது


**************************************************
புதிய மனிதர்கள்
நல்லவர்கள்
அவர்களைப் புரிந்துகொள்ளச்சொல்லி
பழைய தொந்தரவைச்
செய்யாதவரை...

*******************************************************
நான் நானாக இருப்பது
கடும்நடையென்றீர்கள்
விளக்க உரை போட்டு
விநியோகமும் நடக்கிறது
செம்பதிப்பில்லையென
செய்தி சொல்ல வந்துவிட்டீர்

****************************************************************

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை

மூக்குத்திப் பெண்கள்