வியாழன், ஆகஸ்ட் 31, 2017

வாழ்வு

என்ன பிடித்திருக்கிறதென்று 
கேட்பதில்லை
ஏன் என்பதை அவசரமாகக் கேட்டுவிட்டு
பார்வையைத் திருப்பிக் கொள்கிறீர்கள்
அந்தக் கழுத்து 
குளிர் கண்ணாடி அணிவதில்லையே தவிர 
அதே கண்கள்


*************************************************

எங்கே அதைப் பார்க்கப்போகிறீர்கள்
இப்படியாவது பார்க்கட்டுமே என்று
அடுப்பின் முகப்பில் Butterfly
அரைபடும் வாழ்வில் 

ஆசையை நினைவூட்ட ஒரு preethi
அவியவும் வேகவுமே வைக்கும்
புழுங்கல் வாழ்வின் மக்கர் பயணத்தில் 

குக்கர் பெயரில்
Prestige


*****************************************************
குளியலறை துவாரத்தில கட்டெறும்பு வரிசை
கண்டதும் மருந்தடித்தாயிற்று
மற்றபடி ஜீவகாருண்யத்திற்கொன்றும்
குறைவில்லை
வாசலில் இப்போதும்
அரிசி மாக்கோலம்தான்


***************************************************
ஏதாவது செய்துவிடமுடியும் 
என்று தோன்றுகிறது இப்போதும்
இது அவநம்பிக்கையா
எனக் கேட்டுக்கொள்கிறேன்
மூடநம்பிக்கை என்று மட்டும்
சொல்லிவிடாதீர்கள்

******************************************


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...