எங்கள் வெய்யிலும் உங்கள் வெய்யிலும் ஒன்றல்ல

வானிலை  ஊகங்களில்  தொடங்குகிறது 
உங்கள் வெய்யில் 
குளிரூட்டிகளில்  அதை உறைய வைக்கிறீர்கள் 
எங்கள் வெய்யிலோ  உச்சியில் உறைக்கும்போது
தொடங்குகிறது 
முந்தானையிலோ  கைக்குட்டையிலோ 
சும்மாட்டுச் சுருணையிலோ
இழுத்தணைத்துக் கொள்கிறோம் 

இருபத்தஞ்சா  என்று புலம்பியபடியே 
இளநீர் அருந்துகிறீர்கள் 
இருபத்தஞ்சு  என்பதால் சீவமட்டுமே 
செய்வோம் நாங்கள் 

பனங்குலையும்,வெள்ளரியும் 
நின்று விற்கவோ நீட்டிப்படுக்கவோ 
நிழலும்  கிளையுமிலாது வெட்டி விரிந்த 
சாலைகளில் 
வெய்யிலுக்கு முன்பாய்ப் போக 
விரைகின்றன உங்கள் குளிரூட்டிய வாகனங்கள் 
சுமையேற்றிய மிதிவண்டிக்காரன் 
விஸ்வரூபமெடுத்துச் 
சிரிக்கும்  வெய்யிலை மிதிக்கவியலாது 
முன்கம்பியில் அமர்த்திக் கொள்கிறான் 

மரம் நடுவோம் மரம் நடுவோம் 
என்றபடி செடிநட்டுச் செல்கிறீர்கள் 
மழைக்காக இல்லாவிடிலும் 
எங்களுக்காக நடுங்களேன்
 
தார்வண்டி தள்ளியவன் காலில் 
சுருண்டு கிடக்கும் சாக்குச் சுருள் 
கண்டு உயர்த்திக் குலுக்குகிறீர்கள்
ஸ்லீவ்லெஸ் தோள்களை 

ஆண்டுதோறும்  உங்களுக்காக 
உலர்பருப்பு தூவி நிறமூட்டி உறைமாற்றி
பனிக்குழைவு விற்கப்புறப்படுகிறார்கள்
நாங்கள்  சிரமப்படுத்துவதேயில்லை 
ஆண்டாண்டுகாலமாக  ஆரஞ்சு நிறமான 
நாவை நீட்டியே பரவசம் கொண்டுவிடுகிறோம் 

இது எங்கள் தேசம் எனத் தெரியும் 
எனவேதான் 
வெயிலுக்கேற்ற பிளாஸ்டிக் தொப்பிகளோடு 
காத்திருக்கிறோம் முன்னூறு ரூபாய்க்கு 
அந்தக்குளிர் எப்படியிருக்குமெனப் பார்க்க 
அருகில்கூட போகவியலா வரிசையில் 
மண் தரையில் குந்தியதுபோக 
பிளாஸ்டிக் நாற்காலியில்அமர்வது 
தலைமுறை வளர்ச்சியல்லவா 

கருத்துகள்

மகாதேவன் இவ்வாறு கூறியுள்ளார்…
எங்கள் வெய்யிலும் உங்கள் வெய்யிலும் ஒன்றல்ல
மகாதேவன் இவ்வாறு கூறியுள்ளார்…
எங்கள் வெய்யிலும் உங்கள் வெய்யிலும் ஒன்றல்ல

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை