செவ்வாய், நவம்பர் 21, 2017

நாடும் நாட்டு மக்களும் .......

சில சாலைகளின் படங்கள் 
நம்மை நடக்க அழைக்கின்றன
நடந்தவர்களுக்குத்தான் தெரியும் 
எப்போது 
தகிக்குமென

*******************************************

பூஞ்சையான ஒரு நாய்க்குட்டி
அலைபாய்ந்து கொண்டிருக்கிறது
உங்கள் கவலையோ
அது வாலாட்டுவது 
யாரிடம் என்றுதான்

****************************************
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பதில் 
கூச்சம் அடையுமளவு 
அவர்கள் நாகரிகம் பழகவில்லை
பார்த்துக்கொண்டே இருப்பது தீர்வல்ல 
என நீங்கள் உணரவில்லை
நாடும் நாட்டு மக்களும்....
...........,..........
அதிகம்போனால்
என்னவாம் என்பீர்கள் சந்தானம் போல
அவ்வளவுதான்


****************************************

அடித்துப்புரண்டோடும்
காட்டாற்றோரச் சிறு
பாறையாகக் கிடந்திருந்த நாளை நினைக்கிறது
கடலோரப் பெருமணல்
வாழ்வுதான்


***************************************

எவ்வளவோ நினைத்திருந்த ஒன்று 
ஏதுமற்றுப்போவதுவும்
ஏதுமறியா ஒன்றுக்காய்
எவ்வளவோ ஆனபின்னும்
ஏதேதோ தோணுவதும்
இவ்வளவுதானோ என்ற
கனத்துடன் அலைவதுமான
வாழ்வை
வட்டிலில் வைத்து நீட்டியிருக்கும் உலகை
கண்ணீரை விழுங்கும் கணத்தில் கூட 

காறித்துப்ப விட மாட்டேன் என்கிறீர்கள்
அடக்கிய கண்ணீருக்கு 

ஆயுள் முப்பது நாளா


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...