"இருக்கட்டும் இருக்கட்டும்"


கடவுச் சொற்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள்
திரும்பத் திரும்ப
மின்னஞ்சல் ,முகநூல்,வானொலி,கட்செவி 
எங்கெங்கும் எச்சரிக்கை
துரத்திக்கொண்டே இருக்கிறது
பூட்டி வையுங்கள்
இறுக்கி வையுங்கள்
மாற்றுங்கள்
ஊகிக்கும்படி இருக்க வேண்டாம்
ரகசியங்களை உற்பத்தி செய்வோர்
ஒருபுறமும்
ரகசியங்களை உடைக்க விழைவோர்
ஒருபுறமுமான உலகில்
ரகசியங்களைப் பாதுகாக்க விழைவோர்
ஓடிக்கொண்டே இருக்கின்றனர்.
உடைப்பவர்கள் பாதுகாப்பதும்
உற்பத்தியாளர்கள் உடைப்பதும்
என முரண் இணைகளும்
இருப்பதைப் பார்த்து
ரகசியங்கள் சிரித்துக் கொள்கின்றன
முதலில் சூட்டியவை
திருத்தியவை,மாற்றியவை,
ஒவ்வொரு தேவைக்குமான நடப்பு இருப்பு .....
தலைமுதல் கால்வரையிலான ஒவ்வொரு அணுவிலும்
கடவுச் சொற்களையே சுமந்திருக்கிறீர்கள்
அவற்றையே சுவாசிக்கவும்
அவற்றையே உண்ணவும் கூடிய வாழ்வில்
அவற்றை கழித்திடவே முடியாது
சுமந்திருக்கும் நீங்கள்
இந்த வரிகளுக்குள்ளும் அவற்றின் அங்கங்களைத்தான்
தேடுகிறீர்கள்
உங்களைத் தவிர
வேறெவராலும் அவற்றை அடையாளம்
காண முடிகிறதா என ரகசியமாக
நோட்டமிடுகிறீர்கள்
உங்கள் கடவுச் சொல்லின் ஒரு எழுத்து
ஒரு பகுதி
ஒரு பாணி
வேறெவரிடமும் இருக்கக் கூடும்
என்பதே உறக்கம் பிடுங்குகிறது.
உங்கள் உடைமை எல்லாம் உங்கள் உடைமை அல்ல
உங்கள் மூலம் உடைமையாக இருப்பவை
இருக்கட்டும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை

மூக்குத்திப் பெண்கள்