செவ்வாய், நவம்பர் 21, 2017

நிறமிலியானவள்

திருத்தமான ஒரு சித்திரத்தை 
வரைந்தே தீர்வதென்றே நீ அமர்கையில் 
கையிருப்பில் வண்ணமேயில்லை 
அதனாலென்ன 
என் பசுமையெலாம் குழைத்தளிப்பேன் 
கசிந்துருகும் உளமஞ்சள்
இளமஞ்சளுக்கீடாகும்
கண்மணியில் நீலக்கீற்று 
கரைத்த சாந்தோ துளிப்பொட்டு
வரைந்து முடித்த ஆசுவாசத்தில் 

நிமிர்ந்தபோது 
ஒரு நிறமிலியாகி நின்று கொண்டிருக்கும் என்னை
இயல்பாக 

கடந்து செல்கிறாய்

********************************************************************

நீ அப்போது வெட்கப்பட்டிருக்க வேண்டும்
என்றார் நண்பர்
அப்படி ஒன்றும் நிகழவில்லை
அது வழக்கமும் இல்லை என்றேன்
வாழ்வின் நுண் கணங்களை இழந்தவள்
எனப் பரிதாபப் பட்டார் 
அப்படி ஒன்றும் தோன்றவில்லை
அதுவே வாழ்வும் இல்லை என்றேன்
ஒரு பெண்
பெண் போல இல்லாது போவதன்
அவலங்கள் குறித்து
அவர் இந்நேரம் 

ஒரு கட்டுரை வரைந்திருக்கக் கூடும்
நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்
வெட்கம் கொள்ளாது போன
மனிதர்களைப் பற்றி
நுண் கணங்களின் வரையறை பற்றி
எங்களை எங்களைப் போலக்
காண முடியாத காரணம் பற்றி ....

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...