திங்கள், ஏப்ரல் 15, 2019

பூரண நிலா

எங்கோ தூரத்தில் ஒலிக்கிறது 
மனம்கவர்ந்த பாடல்
இடம் வலமா எங்கு நெருங்கவென 
முடிவு செய்யுமுன் 
முடிந்தேவிடுகிறது

**************************************************
மஞ்சள் தளும்பும் 
நிலவுக்குத் தெரிவதில்லை 
கோபதாபங்களோ 
தூரதேசங்களோ

**********************************************
கைப்பிடிச்சுவரில் 
ஒருகையை இறுகப்பற்றி 
மறுகையால் விரிந்த உலகை எள்ளுகிறாள் 
ஒருகாலில் நின்றாடும் பாப்புக்குட்டி
பாத்து...பாத்து எனும் 
என்னையுந்தான்

******************************************************
நேற்று என்பது எவ்வளவு நிம்மதியானது
ஒரு கோடு குறைவான நிலாதான் 
என்றாலும்
அவனை நினைவூட்டவில்லை
*****************************************************
அண்ணாந்து பார்க்காமலே 
தனிப்பாதை தந்த அச்சமோ தைரியமோ 
மினுங்க 
தாளம் தப்பிய குத்துப்பாடலை 
உரக்கப் பாடியபடி
மிதிவண்டியில் போகும் 
அவன் பின்னாலேயே போகிறது பூரணநிலா
மௌனமாய் ரசிக்கும் 
என்னைக் கைவிட்டு

*************************************************
பெட்ரோல் புகை அழுக்கில் மங்கிக்கிடந்த அரளிக்கும்
ஆளுயர முருங்கைக்கிளைக்கும்
கிழிந்த வாழையிலைக்கும்
வஞ்சமின்றி வாரி வாரிப்பூசுகிறது
இருளின் ஒளியை 
ஒய்யாரப்புன்னகை கசியக் கடக்கும்
சமான நிலா




கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...