திங்கள், மே 13, 2019

கத்தரிப்பூ நிறத் துண்டுத் துணி

தனக்கும் சிறகு விரியும் 
என்பதே போதுமாயிருக்கிறது
உன் பார்வையில் நெளியும் 
கூட்டுப்புழுவுக்கு

*********************************************
நல்ல கத்தரிப்பூ நிறத்தில் 
சாயம்போகாத 
புதுமை குலையாத சிறுபூக்கள் வழியும்
ஒரு துண்டுத்துணி 
பிசிறுகளால் 
மதிலோர அரளிக்கிளையில் 
பிணைந்துகொண்டு ஆடுகிறது
எங்கிருந்து வந்தாயோ
பதற்றமாயிருக்கிறது 
*************************************************
மஞ்சளோடிய நரைமுடி பறக்க
வீதியோரச் சாக்கடைக்கு 
சற்றுத்தள்ளி உரச்சாக்கை விரித்து
நாலு கீரைக்கட்டோடு அமர்ந்த
காத்தாயியிடம்
உங்கள் வாக்கு உங்கள் உரிமை 
துண்டுப்பிரசுரம் தந்து
 கும்பிட்டுப் போகிறவரின் 
மோதிரங்கள்தான் 
அவள் மனதில் நின்றன.

***********************************************

இதுவாவது கிடைத்ததே
என்று தட்டிக்கொடுக்கும்போது மட்டும்
இந்த மனசுக்கு 

ஆயிரம் உக்கிரக்கண்கள் முளைத்துவிடுகின்றன
வருடித்தாலாட்ட வேண்டிய 

இருப்பிலுள்ள இரு கைகளுக்கும் 
அவசர வேலைகள் ஆயிரம் வந்துவிடுகின்றன
*******************************************************************************

உன்னோடுதான் நின்றுகொண்டிருந்தேன்
நேற்று உன்னைக் காணும்வரை
இருக்கும்போது இல்லாமலிருப்பதும்
 இல்லாதபோது 
இணைந்தே இருப்பதுமான வன்முறை
புரிவதேயில்லை

********************************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...