ஞாயிறு, மே 05, 2019

மலரும் நட்சத்திரங்கள்

நெகிழ்நிலமாக இருத்தல் குறித்து 
எந்தப்புகாரும் இல்லை
சற்றுமுன் என்னைக்கடந்த 
தலைகளின் ஊர்வலம்தான் 
வேடிக்கை
குறுகுறுப்போடு கூடப்போய்க்கொண்டிருந்த
ஒருவன் பிடிமண் எடுத்து
ஒளித்துக்கொண்டான்
விதைகளுக்கான காத்திருப்பில்
இதுவும் ஒரு அங்கம்

************************************************************
மலையகத்திலிருந்து வாங்கிவந்த செடி
பூத்திருக்கிறது
குறை இதழ்களைச் சுட்டினாய்
சட்டகங்களுக்குள் 

அடங்கா அழகில் 
லயித்து நின்றேன் நான்
******************************************************************
வாசித்துக்கொண்டிருந்த வயலினை
மொட்டைமாடித் தரையில் வைத்து
இறங்கித் திரும்பினேன்
சுரங்களின் கீர்த்தியைத் தந்திகள் 

அவ்வப்போது நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன
என் இன்மையில் இறங்கியிருக்கலாம் 

சில நட்சத்திரங்கள்
திரும்பியபோது வயலின்மேல்
விழுந்திருந்தன 

ஒலாந்த மல்லிக்கொடியின் சில மலர்கள்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...