செவ்வாய், ஆகஸ்ட் 24, 2021

கோழையைத் துப்புதல்

 கவிதை 1

என்னை அண்ணாந்து பார்க்காதீர்கள்
உங்கள் பாதையில் அன்றாடம் இரண்டு கண்ணிவெடி
வைக்க வேண்டியிருக்கிறது
உங்கள் ஊரில் அவ்வப்போது
ஒரு வன்புணர்வு நடத்த வேண்டியிருக்கிறது
உங்கள் சோற்றுத்தட்டில்
ஒரு பிடி மண்ணோ
சிறு துளி நரகலோ
இட வேண்டியிருக்கிறது
இல்லாவிடில்
எதையாவது கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள்
எத்தனை அந்தரத்தில் அமர்ந்து கொண்டாலும்
பல் குத்தியபடி
ஒரு விமர்சனம்
என்னை அண்ணாந்து பார்க்காதீர்கள்
உங்களைக் குனிந்து பார்க்க நான் வருவேன்
அதுவரை
கவிதை 2
நல்ல மருந்து தெரிந்தால் சொல்லுங்கள்
வரி வரியாகப் பழுத்திருக்கிறது
உடலெங்கும்
தாங்கியதாலா
தாங்காததாலா எனத் தெளிவில்லை
கண் எரிச்சலிலிருந்து
கசிந்து கொண்டேயிருக்கும்
நிலைக்கு வந்தாயிற்று
சிவப்பைப் பார்த்து அஞ்சி
சீர்கெட்ட மருந்துச் சொட்டுகள்
இறங்கி இறங்கி
தொண்டைவரை கசப்பு
மூன்று நிமிட ரத்தக் கொதிப்புகளை
ஒவ்வொரு நாளும் கடந்து கடந்து
அழுத்தமானியின் பட்டை இறுகுவதேயில்லை
இப்போதெல்லாம்
காறித் துப்பி
வெளியேற்றவேண்டிய கோழை களை
மென்று விழுங்கும் இந்நோயின்
பெயர் நடுநிலை என்கிறார் நண்பர்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...