செவ்வாய், ஆகஸ்ட் 24, 2021

டிக் டிக் குரலில்..

    வேறு வேறு வீடுகளின்

வேறு வேறு நிறச் சுவர்களை அலங்கரித்த
அந்த நீலக் கடிகாரத்தின்படிதான்
வாழ்க்கை நடந்தது
பெரிய முள்ளும் சின்ன முள்ளுமாக எத்தனையோ முள்ளைப் பார்த்திருக்கிறது
அதிகாலை அலாரத்தையும் மீறி
உண்மையிலேயே
நான்கு மணி ஆகிவிட்டதா என
உறுதிப்படுத்திக் கொள்வதற்காக
எட்டிப் பார்க்கும்போது
விடிவிளக்கின் ஒளியில்
ஆமாமா எழுந்திரு
எனப் பரிவோடு சிரிப்பதாய்
நான் பொய்சொல்லி
இன்னும் கொஞ்சம் புரளத் திட்டமா
சோம்பேறி எனச் செல்லமாய்க் கடிவதாய்
நினைத்துக் கொண்ட மறுகணம்
நாளின் சக்கரம் சுழலத் தொடங்கும்

எப்போதாவது விழித்துக்கொண்டு
பார்த்தால்
நேரத்தில் உறங்குவதில்லையா போ போ
எனக் கண்டிக்கும் டிக் டிக் குரலில்....
எட்டியிருந்ததால்
தலையில் தட்டு வாங்காது தப்பித்து
டைம்பீசிடம்
கேலி பேசும் குறும்பு வேறு
இனி ஒன்றும் செயவதற்கில்லை
என்று அம்மாவைக்
கைவிட்டது போலவே
நீலக் கடிகாரத்தையும் கைவிட்டார் ஒருநாள்
இனி எதையும் மாட்ட வேண்டாம்
அவரவர் மொபைல் இருக்க
அசிங்கமாய்த் தொங்கணுமா
இளசுகளின் குரலில்
எழும்பப்பார்த்த பரிசுப்பெட்டிகள்
மீண்டும் உறைக்குள் சுருண்டுகொண்டன




கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...