சாக்கடை வெட்டமுற்பட்டு
சாலையை வெட்டிவிடும்
அபத்தங்களின் பின்னால்தான் இருக்கிறது
யாரோ எதையோ குலைத்துவிட்டதாகத்
தினமும் புலம்பும் வாழ்வு
மண்வெட்டியால்
நீ ஒரு வெட்டு
நான் ஒரு வெட்டு
கை காலில் போட்டுக்கொள்ளாமல் வெட்டிவிட்டால்
நீயும் வெற்றியாளனே
****************************************************
நிசமாகவே
இன்னும் ஒருவேளைச்சோறே பெரும்பாடானவன்
இருக்கிறான் மைலார்ட்
ஏக்கர்கணக்கில் கட்டப்படும்
ஓய்வுக்குடில்களின் சுவர்மறைப்பதால்
நீங்கள் பார்க்க முடியவில்லை போலும்
உங்களோடு கைகுலுக்கும்
சர்வ வல்லமை படைத்தவர்கள் வீட்டு
கச்சோரியும் ஏற்றுமதி ரகத்தேனீரும்
சுவைக்கும் பொழுதில் அந்தப் பலகணியில் நில்லுங்கள்
தெருவுக்கும் உங்களுக்கும் தொலைதூரமென்பதால்
ஒரு உருப்பெருக்கி அவசியம்
அப்போது காணலாம் அந்த கந்தல்பொறுக்கி ஐயனார்களை
எதற்கும் அவசரப்பட்டு
காவற்கம்பை நீட்ட வேண்டாமென்று
மெய்க்காவலர்களிடம் சொல்லி வையுங்கள்
பொட்டென்று போய்விடுவான்
பிறகு
நீங்கள் எதெதற்கோ சேமித்து வைத்துள்ள
கண்ணீர் கொஞ்சத்தைச் சிந்த வேண்டி வரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக