செவ்வாய், ஆகஸ்ட் 24, 2021

ஆடம்பர நினைவுகள்

      ஊர்ப்பக்க எலுமிச்சையெல்லாம்

உருண்டு உருண்டு விழத்துடிக்க
வாகான குழிக்கரண்டி
வைக்க வகையற்ற
உள்ளூர்ப்பள்ளி
டீச்சர்
ஒவ்வொரு முறையும்
சொல்வார் உங்க வீட்டில இருந்தாச்சும் கொஞ்சம் நல்ல
ஸ்பூன் கொண்டு வாங்கடி என்று
ஊசியில் கோர்க்க
எச்சில் தொட்டுத்தடவி நூல் இழுத்தபடியே
தலையாட்டிக்கொண்டோம்
புதிய டசன் வளையலைக் கும்மிகொட்டி உடைத்துவிட்டு
ஒற்றை சாட்டின் ரோஜாவைப் பரிசென்று கொண்டுவரும் மகள்களை
அள்ளி முத்திடத் தெரியாத அம்மாக்கள்
அடுத்தவீட்டுப் பெண்
உருப்படியா வாங்கிவந்த சோப்புடப்பாவும்
வரவில்லையென்று குட்டினார்கள்
பென்சில்,ரப்பர் ,நோட்டு,
பென்சில்டப்பா,
என செலவைக் குறைக்கும்
பரிசுகளுக்கு வாக்களிக்கவே அப்பாக்கள் விரும்பினர்
நாங்களோ வெறுங்காலோடு
ஓடி
சில்லுபெயர்ந்து எரிந்த தோலுக்குமேல்
குழாயைத் திறந்துவிட்டவாறு
கடித்துக்கொள்ள
ஒரு கமர்கட்டோ
கடலை மிட்டாயோ தரும்
பி டி டீச்சருக்காகக்
காத்திருந்தோம்
தீபாவளிப் பாவாடைக்குமேல்
ரிப்பன்களைக் கட்டிக்கொண்டு
ஆடு பாம்பே
எனச் சுழன்றாடியவளுக்கு
ஜாமெட்ரி பாக்ஸ்
பரிசளித்த ஆசிரியரை
வாய்ப்புக் கிடைத்தால் அந்த காம்பசால்
ஒரு கீறு
கீற சபதம் போட்டான்
அவள் நடனத்தின்
ரசிகனாகிவிட்ட
பக்கத்து வகுப்பு நண்பன்
இப்போதும் சந்தனம் குழைக்க
நான் வைத்திருப்பது
பத்தாம் வகுப்பு
தமிழ்மன்ற விழாவின் பரிசுக் கிண்ணம்தான்
அந்த வருடந்தான்
ஐந்து ரூபாயில்
குட்டி எவர்சில்வர் பாத்திரங்கள் வரத்தொடங்கின.
அப்புறமெல்லாம்
தட்டு தம்ளர் டிபன் பாக்சென
ஆடம்பரப் பரிசுகள்
அடுக்கி வைக்க
இரண்டு பெஞ்சுகள்
இழுத்துவந்து போட்டோம் மேடையில்




கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...