உங்கள் அழைப்பை ஏற்காது கிடக்கும்
எவரொருவரின் அலைபேசியும்
உங்களை வேண்டுமென்றே
நிராகரிப்பதில்லை
கொதிக்கும் வார்த்தையாடல்களுக்குத்தப்பி
அந்த அலைபேசி
வெயில் மொடமொடப்போடு
மடிக்கக் காத்திருக்கும் துணிகளோரம்
ஒடுங்கிக் கிடக்கலாம்
வார்த்தைகளின்மேல் வெறுப்புற்று
கண்மூடி
இசையில் மூழ்கிக் கிடப்பவன்
ஏதோ ஒரு படிக்கட்டில் கழற்றிவைத்த
காலணி,சட்டை,சராய் வகைகளுக்குள்
விச்ராந்தியாகக்
கிடக்கலாம்
எதிராளியை ஏதும்செய்ய இயலா வெடிப்பில்
விசிறியெறிந்து
உயிரிழந்தும் கிடக்கலாம்
ஆனாலும்
மீண்டும் மீண்டும்
அழைப்பவர்கள்
சிலசமயம்
வாழவைத்து விடுகிறார்கள்
அலைபேசியையும்
உடைமையாளரையும்
போனால் போகிறது
வைதாலும் வாங்கிக்கொள்ளுங்கள் சார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக