நல்லதே கெட்டதோ
போட்டிருக்கும்
கீற்றுப்பந்தலின் மேலே கட்டிய கூம்புவழி
இயக்கப் பாடல்களை
காற்றில் பரப்பிக்கொண்டிருந்தது ஒரு தலைமுறை
வீட்டுக்கஞ்சியைக் குடித்துவிட்டு
பொடிநடையாகக் கிளம்பி
பக்கத்து நகரத்தின்
பொதுக்கூட்டம் பார்க்கச் செல்வதும்
கூலியை இழந்து
கிடைத்த வாகனத்தில் தொற்றி
அலங்கார வளைவுகளை வேடிக்கை பார்த்து
ஊர்வல நையாண்டிமேளத்துக்கு
நின்ற இடத்திலேயே சொடக்கு போட்டு ஆடி
பந்தல் மணலில்
தூங்கி
என்ன பேச்சு...என்ன பேச்சு என்றபடி திரும்புகிறவன்
மறுநாள் வேலைத்தலத்தில்
பாடிக்காட்ட கற்று வந்திருப்பான்
முழக்கப் பாடல்களை
குட்டியானைகளும்
இருநூறு ரூபாய்
நோட்டுகளும்
பிரியாணிப் பொட்டலங்களும்
சாராய பாக்கெட்டுகளும்
நிரம்பிவிட்ட அரசியல் பாதைகளில்
கொள்கை முறுக்கேறிய
குரல்களும் அற்றுப் போயின
காலம் மாறட்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக