தேன்கூடு தோடு முத்தண்ணிக்கும்
பாகப்பிரிவினை தோடு
செல்வியக்காவுக்கும்
மாங்காய் தோடு
பாக்கியத்தத்தைக்கும்
ஏழுகல் தோடு
கமலத்தாச்சிக்கும் அடையாளம்.
தொங்கும் காதில் கனத்த சுரையோடு
கெம்புச்சிவப்பில் தன் வெற்றிலைச்சாறு போலவே வருவாள்
தெய்வானை ஆத்தா
ஆராதனா தோடும்
ஆடும் வளையமுமாக வந்த
மருமகள்கள் மாற்றிக்கொள்ளவென்று இன்னொரு செட்டும்
வைத்திருந்தது
நடுத்தெருவுக்கு
புதிய செய்தி
ஆராதனா தோட்டுக்காரி
எண்ணெய் இறங்கிய கல் தோட்டையும்
வாத்து மூக்குத்தியையும்
கழற்றாதே என்று
தாலி கழற்றிய தன் மாமியின் கையைப் பிடித்தது
அதைவிடப் புதிய செய்தி
ஆயுளுக்கும்
ஒற்றைத் தோட்டையே அடைகாத்த காலம் மாறி
பெயர்வைத்த,பெயர்வைக்காத
தோடுகள் சில வாங்கிக்கொள்ளப் பழகிவிட்டார்கள்
நடுத்தெரு நாயகியர்
நடுத்தெருவின் வீடுகள்
ஆட்கள்
மாறினார்கள்
வளர்ந்த ஊரின் ஓரத்தில் கிடக்கும் நடுத்தெருவுக்கு
ஜெயிலும் ஊருமாக வாழ்ந்த
உள்ளூர்த்தலைவர் பெயர்கூட வைத்தாயிற்று
குடும்பத்துக்கு ஆகாது என்ற குரல்களும்
வளை உடைத்துக் காயமாக்காதே
என்ற ஒற்றைக் குரலுமாகக்
கருமாதி வீடு சலம்பும் நடுத்தெரு
இன்னுமிருக்கிறதுதானே
ஏதேதோ பெயர்களில்
எல்லா ஊரிலும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக