சீக்கிரம் எல்லாம் பழசாகிவிட்டது
பழகிவிட்டது
அலுத்து விட்டது
மறந்துவிட்டது
கபசுரக்குடிநீர்
முகக்கவசம்
கிருமிநாசினிக் குழல்கள்
உடம்பு சுடும்வரை
வீடு
பகுதி பகுதியாக ஊரடங்கு
தடுப்பூசித் திருவிழாக்களில்
தேர்தல் திருவிழாக்களில்
பலூன்கள் பறக்கின்றன
யாவும் இயல்பு
மருத்துவமக்களே
அந்தக் காப்பீட்டு அறிவிப்பைக் கொஞ்சம்
நகர்த்தி வைத்துவிட்டால்
தலைவரின் முகதரிசனம் நன்றாகத்தெரியும்
யாரப்பா அங்கே
பிரம்மாண்ட கட்டுமானங்களின் செங்கல் செலவைப்
பிணங்களை அடுக்கிக்
குறைக்க முடியுமா எனப்பார்
ஆக்சிஜன்,படுக்கை என்றெல்லாம்
புதிய கெட்ட வார்த்தைகள்
உருவாகியிருக்கிறதாமே
பயமே இல்லாமல் போய்விடுகிறது
இதற்கு ஏதாவது ஒரு வரி போட்டால்தான்
சரிவரும்
குப்புறப்படுத்தால் ஆக்சிஜன் ஏறும்
அந்தப்பக்கம்
ஒரு விளம்பரத்தட்டி
நட்டுவை
PPE உள்ளே வேர்க்கிறதா
இன்னுமா பழகவில்லை
ஆறு மணிநேரம் வேலை செய்தால்
அப்படித்தான் திணறும்
பதினெட்டு மணிநேரம் வேலைசெய்யப்
பழகுங்கள்
முன்னேர் வழி நடக்கப் பழகுங்கள்
ஒரே நாடு
ஒரே அழுகை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக