உமட்டுது
உமட்டுது
இதுதான் அவள் அதிகம் பயன்படுத்திய
சொல்லாயிருக்கும்
இந்த பத்துமாத ஆட்டத்தில்
ஒரே சொல்லை திரும்பத்திரும்பச்
சொல்லியமைக்காக
விலக்கி விடுவீர்களா என்ன
பை ரன்னராகவும் முடியாமல்
வேடிக்கை பார்க்கிறவரே
ஒரு முதுகு தடவலோ
வாந்தி சுத்திகரிக்க
ஒரு குவளை நீரூற்றலோ செய்கிறவனிடம்
கொஞ்சம் கரிசனம்
கடன் வாங்க முயன்றாலென்ன
அப்புறம் ஒரு விஷயம்
இது கடன் வாங்கிக் கழித்தல் அல்ல
கடன்வாங்கிக் கூட்டல்
************************************************
தூக்கிச்செருகிய குதிரைவால் கொண்டையுடன்
மேசையடியில் உட்கார்ந்திருக்கும் சிறுமி
அச்சு அசல்
மகள் போலவே முறைக்கிறாள்
அவள் அண்ணனோ
மகன் போலவே அவளிடம் வம்பிழுக்கிறான்
புதிதாக வந்திருக்கும் விளம்பரம்
சில மாதங்களாவது
கடந்துபோன பிள்ளைகளின் பால்யத்தை
தினம் சில விள்ளல்களாகத் தரக்கூடும்.
அடுத்தடுத்த தடவைகளில்
அவள் கண்டுபிடித்து நினைவு கூரக்கூடும்
இதே வட்டக்கழுத்து சட்டை அவனிடம்
வேறு நிறத்தில் இருந்ததையும்
மகளின் சீருடை கட்டங்களுக்குப் பதிலாக
கோடுகள்
ஆனால் அதே நிறமென்பதையும்
இன்னும் சிலபல
ஒற்றுமை வேற்றுமைகளையும் கூட
******************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக