புதன், நவம்பர் 10, 2021

முந்தானையிலொடுங்கும் சிறு கடவுள்

  கடற்கரைக்குச் செல்லுந்தோறும் பின்கொசுவச்சேலையும்

பூண் இட்ட கோலுமாகச் சுற்றிச்சுற்றி வருவாள் ஒருத்தி

அவளையொத்த இன்னொருத்தி
சற்று தொலைவில்
வலப்பக்க முந்தானையும் முக்காடுமாகச் செல்பவளையோ
சரிகைப்பொட்டு சேலை தடுக்க தடுக்க
தன்குழுவோடு இணைய ஓடும் வெளியூர்ப்பெண்ணையோ
துரத்திக் கொண்டிருப்பாள்
போனவாரம்
தர முன்வந்த பத்து ரூபாய் மறுத்து
உன் கை நீட்டினால்
என் கை நீளும் என
சிரித்து நகர்ந்தவள்
அவளா
இவளா
தெரிந்து கொண்டிருக்கலாமோ
துக்கத்தின் நெருப்புத் துண்டை
நொறுங்கத்தின்று
நூறுவயது வாழப்போவதை
மறுக்க மறுக்க யாரையாவது
துரத்தி
விதி சொல்ல அழைக்கும்
அவளும்
அப்படியொரு நெருப்புத்துண்டு
ஊண்காரியாகத்தான் இருப்பாளோ
அக்கினிக்குஞ்சின்
பொந்தாக
அசைகிறது
அவள் இடுப்பிலாடும் சுருக்குப்பை
இடதுமூக்கில் வளையமிட்ட
நாணச்சிரிப்பழகியின்
முந்தானையிலொடுங்கும் சிறு கடவுள் சிரிக்கிறது
சகல துன்பமும் தடுக்க
அவள் நீட்டும் தாயத்து பார்த்து




கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...