காசு முக்கியமென்றால்
ஏற இறங்கப் பார்ப்பீர்கள்
முணுமுணுப்பீர்கள்
கேட்காதபடி கெட்ட வார்த்தை கூட சொல்வீர்கள்
ஆணென்றால் முதலெழுத்தையும்
கடைசி எழுத்தையும் புள்ளியிட்டு எழுதி
வீரத்தையும் கண்ணியத்தையும்
ஒருங்கே காத்து விடுவீர்கள்...
சல்லிக் காசில்லாமல் நிற்கும்போது
பொறை வாங்கிப்போட்ட
தெருநாய் வாலாட்டலுக்கே உடைந்து அழத்தோன்றும்
யாரோ யாரையோ
சீத்துக் குறைவாகப் பேசினால்
சாடை தனக்கோ எனக் குறுகுறுக்கும்
வளப்பமாயிருக்கையில் வாங்கிய உடையை
உடுத்தவும் உறுத்தும்
இரக்கமாய் தரவரும்
பொருளுக்குள் நஞ்சு சுரக்கும்
பரவாயில்லை என்று சொல்பவனை
ஓங்கி அறைந்துவிட்டு
வக்கத்த நாயிக்கி என்று வசவு வாங்கியவருக்குத்
தெரியும் இதெல்லாம்
மற்றவர்
அமைதியாய்க் கடப்பாராக
**********************************
என்னைக் கடத்தினால் என்றொரு அலை
எல்லோரும் முங்கியெழுகிறார்கள்
புதிய பார்வை
என்றதும்
பார்த்த ஞாபகம் வராத படங்களோடு வருகிறார்கள்
என்னைப்பத்தி நீ என்ன நினைக்கிறாய்-
யேசுதாசின் குரலில் கேள்வியைப் போடுகிறார்கள்
எல்லாம் எதற்காக
மலைக்கோயில் மதில்மேல்
மரத்தின்மேல்
சீரற்றுத் தாவிக்கொண்டிருக்கும் குரங்குக்குட்டி
கைப் பண்டம் பிடுங்குமுன்
ருசித்துக்கொள்ளும் ஆவல்தான்
ஒரு புன்னகையை வீசுங்கள்
பிழைத்துக் கிடப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக