ஞாயிறு, ஜனவரி 09, 2022

காவிய பாத்திரங்கள்

 சன்னலுக்கு வெளியில் அலமாரிக்கும் கதவுக்குமான இடுக்கில் கிணற்றடி வாழையிலைகளில் குடியிருந்த பேய்கள் பாய்நனைந்த அவமானங்களின் பின்புலத்தில் நின்றாடியது அறியாத

அப்பா

ஒரு குண்டு பல்பை மாட்டி
வைத்தார்.
முறுக்கிய வயர்களில்தான்
அந்தப் பேய்கள் தூக்கில் தொங்கின
அறிந்திருந்தால்
அதற்கும் இரண்டு ரூபாய்
ஏற்றி வைத்திருப்பான்
கம்பெனிகாரன்
அன்றாடம்
பாய் அலசும் வேலை அற்றுப் போனபின்
அம்மா செல்லமாகச் சலித்துக்கொண்டாள்
”இந்தப்பிசாசுங்க
இவ்வளவுநாள் படுத்துன பாடு” என்று ********************************************************
வாங்கிய கடன் டெமக்ரானில் கரையுமா என
யோசிக்காது தொண்டையில் கவிழ்த்த தகப்பன்
தகனமேடையிலிருந்து பிடிசாம்பலோடு
பொறுப்புகளையும் அள்ளிவந்த
பிள்ளைகளின் கதையிலும்
தொடுகையின் இதம் அறியாது
வசவுச்சொற்களின் கைப்போடு
தள்ளியிருந்தே நெருப்பு விழுங்கிய
பிள்ளைகளின் கதையிலும்
தன் தேவை தன் சுகம் தன் உரிமையென்று
அணுவழி உறவன்றி
அணுவளவும் யோசிக்காது
அலையவிட்ட அப்பனின் குடும்பக் கதையிலும்
அப்பா என்ற சொல்லை
அழிரப்பர் வைத்து அழித்துவிட்டு
கோடிட்ட இடங்களாகவே வைத்திருக்கும்
பக்கங்களில் தவறுதலாகப் போய் தந்தையர்தினச் சித்திரங்களைக்
கவிழ்க்காதீர்கள்
எல்லாச்சொல்லுக்கும்
எல்லார் வாழ்விலும் ஒரு பொருள் இல்லை ***************************************************************
இத்தனை செல்லம்கொஞ்சும் வார்த்தைகளை
எங்கே கற்றான் இவன்
வியப்புடன் பார்க்கிறான் மகனை
எம்பிராணனை எடுக்காதே என்று
அந்தநாளில் பிள்ளைகளிடம் கத்திக்கொண்டிருந்த
மனைவியும் மருமளுக்குப் போட்டியாகத்
தலையாட்டி ,உடல் நெளித்து ,குரல் மாற்றிகூடக்
கதை பேசுகிறாள்
மனதுக்குள்ளான ஒத்திகைகள் மறந்துபோக
ஒவ்வொரு முறையும்
ம்
சரி
என்றே பதில் சொல்லித் தொலைக்கும் அவன்
அப்பாவாகவே உறைந்துவிட்டதை
உதறித் தாத்தாவாக வளர வேண்டுமென
நினைத்துக் கொள்கிறான்
தங்கமே என்று பேத்தியை விளிக்கும் நாளில்
சொல்லு ராசா என்று மகனை
அழைத்தால்...
முழிக்கப்போகும்
முகங்களை நினைத்து முளைத்த புன்னகையை
அவசரமாக விழுங்கியபடி
பத்திரிகை படிக்கிறது அந்த அப்பா காரெக்டர் ************************************************************
என்னிக்கி சொன்ன பேச்சு கேட்டிருக்கான்
பனிக்குடத்தண்ணிய குடிச்சுராதேன்னு சொன்னா
கொடிசுத்தி உருண்டவன்தானே
கெப்புறு புடுச்ச கிழவி
திட்டுதா பெருமை பேசுதான்னே
அவனுக்கும் புரியல
ஊருக்கும் புரியல
உருண்டு திரண்ட
உடம்பை வச்சுகிட்டு
ஒருவேளை சோறுகூட சம்பாதிக்காதவனுக்கு
வண்ணமா வடிச்சி கொட்டுற கிழவி
வாரியலோட துரத்துனப்ப ஏன்னு புரியல
போதை தெளிஞ்ச காலைலயும் புரியல
ஆனா
கிழவி எல்லாத்தையும் பெருமையாப் பேச மாட்டான்னு மட்டும்
அவன் வயசுல
அன்னிக்கிதான் புரிஞ்சுது

கருத்துகள் இல்லை:

உடன் நடக்கும் வயது

  முக்கியம் முக்கியம் எனச் சேர்த்தவற்றுக்குள் எங்கோ இருக்கிறது நண்பனின் வாழ்த்து அட்டை ஆத்தாவின் புடவைத்துண்டு எனாமல் பதித்த ஒற்றைக் கொலுசு ...