மறந்தே போய்விட்டது
கவிச்சி கலந்து
முகத்திலறையும் உப்புக்காற்றில் கூந்தல் பறக்க
அலை மோதும் பாதங்களுக்கடியில் கரையும் மணலில்
தடுமாறித்தடுமாறி
நகர்ந்து கொள்ளும் கடலோரப் பொழுதுகள்
பெயர் தெரியாச்செடிகளும் பூக்களுமான
கலவையான மணத்தோடு
உயரும் மலைப்பாதையின்
சுற்றுச்சுவர்களில்
தாவும் குரங்குகளும்
சிறுதீனி இடைநிற்றலுமான
இலக்கற்ற குறிஞ்சி நாட்கள்
பெருவழியற்ற
மரங்களூடே
குறைந்த ஒளியில்
விரையும் வாகனத்தினுள் சுழலும் இசைவரிசையை
அடுத்தடுத்து
உன்னுடையது
என்னுடையது
எனப் பங்குபிரித்துச் சொந்தம் கொண்டாடிய
முல்லைவழிவாசம்
பெருகும் நதியோரப் பாதையின் மறுபக்கம் விரிந்த
பச்சைப்பாயில் போய்ப்படுத்துக்கொள்ளும்
மனசை அள்ளியள்ளி மீட்டுவரும்
மருதயோகம்
எதுவுமில்லாது
எங்கு
எங்குதான் இருக்கிறேன்
வயதும் மறந்து வாழ்வும் மறந்து
நினைவிருப்பதெல்லாம்
இடைவெளிகள்தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக