செவ்வாய், ஜூன் 11, 2019

உடையா சருகின் மிச்சம்

இலைகளைக் கீழிறக்கிவிட்டு
மேலே மொட்டு மொட்டென 
விழித்துக்கொண்டிருக்கும் கிழங்கை 
எப்படிக்கொள்ள
அவிதல் அதற்குச் சம்மதப்படாது
கடல் என்றுதான் சொன்னார்கள்
நெளிந்து ஓடுகிறது
ஒதுங்கிய குப்பையில் சிப்பியுமில்லை
உடையா சருகின் மிச்சம்
கூடாகி சிரிக்கிறது
அதற்குள்ளும்
ஒரு குட்டிப்புழு
****************************************************
சன்னலுக்கப்பால்
துளித்திண்டு போதுமாயிருக்கிறது 
நான்கு குருவிகளுக்கும்
உட்பக்கம் இருக்கும் நெரிசல்
தாளாது
ஆடுகிறது திரைச்சீலை
குருவி கால்மாற்றி சற்றே எழும்பி
மீண்டும் அதே திண்டில்
அமர்ந்து கொண்டது
******************************************************
சொல்வதற்கென்று ஒருவரி
கேட்பதற்கென்று
சிறு தலையசைப்பு
பார்த்துப்போ
உள்ளிரங்காது 
வழிந்து கிடக்கிறது 
************************************************************
உறங்கிக் கொண்டிருக்கும் மொட்டுகள்
சற்றே திடுக்கிட்டுவிட்டன
மழைத்துளியே மெள்ள மெள்ள ....
குளத்துச்சிறு மீன்களும் பாவம்
******************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...