சனி, பிப்ரவரி 05, 2022

வளர்ந்த கலை(தை)

    "பொண்ணு வளர்த்த அழகைத்தான் மெச்சுவாங்க" என்ற வசனத்தைக் கரைத்துப் புகட்டி நான் வளர்கிறேனே மம்மி என்றால் நறுக்கெனக் குட்டி

"புளியைக் கரைக்காதே சனியனே"
என்று ஆசைமொழி பேசும் அம்மாக்களும் அத்தைகளும்
சித்திகளும் ஆத்தாக்களும்
கவலை கொண்ட வளர்ச்சி
கார்மேகக்கூந்தல் அடர்த்திதான்
கட்டியாய்த்தின்பதைக்
கரைத்துக் குடித்தாலும்
எண்ணெயும் அரப்பும் தப்பாது
கரிசலாங்கண்ணி மருதாணி
தேடித்தேடி அரைத்து வில்லைதட்டி
ஊறவைத்த எண்ணெய் வாடையோடு
சாட்டையாய்த் தொங்கும் சங்கரியின் பின்னல்
கூழையாய்ச்சுருளும் நாய்க்காது சடையை
ரிப்பனின் பட்டர்ஃபிளை முடிச்சாவது
அழகாக்கிடாதா என்ற ஆசை
விஜயாவின் அவ்வாவுக்கு
பள்ளிவிடுப்பென்றால்
அம்மாவின் முழங்காலுக்குள்
சாமியாடியபடியே
பேன்களுக்கு சாவுபயம்
காட்டிக்கொண்டிருப்பாள் தைலா
ஈருளியும் வெள்ளியில் வைக்கணும்
என்ற வள்ளியம்மை வீட்டுச் சீர்ப்பட்டியலை நினைத்தபடியே
இரவல் ஈருளியைக் கழுவிக் கொடுப்பாள் செல்வி
ஃப்ரீ ஹேர்விட்டு
பூர்ணிமாவும் நதியாவும் செருகிக்கொண்ட
பின்னூசிகளை
சரிதாவாக வழித்துச்சீவிதான் செருகிக்கொண்டோம்
கேசவர்த்தினியும்
சடங்குச் சீரில் அடக்கம்
பள்ளிக்கால ரிப்பன்களை
மீண்டும் மகள்களுக்காக அளந்து வாங்கி
மறக்காமல் ஓரம் தைத்த அம்மாக்கள்
பாட்டியானபின்னும்
தொலைக்காட்சித் தாய்மார் மகளின் பின்னலை இழுத்து
"நீ எங்கே குட்டியா இருக்கே"
என அடர்த்தியை நீளத்தை அளந்துகொண்டே இருக்கிறார்கள்
தோள்வரை கத்தரித்த கூந்தலை
குட்டிக் கிளிப்பில் அடக்கிவிட்டு
"பாய்கட்தான் ஆனா கேர்ளுக்கு"
என்று சிகைதிருத்துநரிடம் நேரம் கேட்கும் அம்மாக்கள்
ஓரக்கண்ணால் சிரித்துக் கொள்கிறார்கள்
கூந்தலால் வளரும் விளம்பரம் பார்த்து
கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...