வெள்ளி, மார்ச் 16, 2012

போக்குவரத்து நெரிசல்

    
எதிரிலுள்ள 
 
அடுக்ககத்தின்
 
பின்பக்கத்திலிருந்து  கிளம்பி,
 
மின்வடம்,தந்திவடம்
 
அளவிலாக்குடியில் தன்னிலை
 
இழந்த பாதசாரிபோல்
 
அண்ணாந்து கிடக்கும்
 
தொலைக்காட்சிக்குடைகள் 
 
அலைபேசிக் கோபுரங்கள்,
 
வழிமறித்து வேடிக்கைபார்க்கும்
 
நட்சத்திரங்கள் தாண்டி 
 
கண்ணுக்கெட்டும் 
 
ஜன்னல் சதுரத்துக்குள் 
 
நிலா 
 
வந்து சேரும்போது 
 
இரவு உணவு நேரமாகிவிடுகிறது ! 
 
                   12.3. 12  உயிரோசையில் வெளியானது  

வியாழன், மார்ச் 15, 2012

நஞ்சாகும் அமுது

சோப்பு விற்க
(எல்லாம் திறந்திருந்தால்)
முப்பது வீடாவது
ஏறி இறங்க வேண்டும்.....!

தள்ளுவண்டி காயின்
பசுமை வாட
தராசுக்கு வேலையில்லை..
தெருமுனை உணவக
தள்ளுபடிவிலையே மிஞ்சும் !

மூட்டை இறக்க வாகாக
அந்திவரை நிற்காது
வந்த வாகனம் ...!

தலைக்கவசத்துக்குள்ளும்
பேருந்து நெரிசலிலும்
பெருகும் ஆறு
உதிர்க்கும் சொல்லில் எல்லாம்
லாவா தெறிக்கிறது ...!

இங்கேயே
கிடந்து இறைபடும்
சூரியனே
எட்டப்போ கொஞ்சம்...
பிரபஞ்சம் பெரிதாமே....? 

திங்கள், மார்ச் 12, 2012

அபி உலகம் -7

அபிக்கு மிகப் பிடிக்கும்
திராட்சையோ
கல்கண்டோ
காலை மறந்தாலும்
மாலை வரை
தின்னாமல்,திட்டாமல்
ஈ ,எறும்பு,
அண்டாமல்
காத்திருக்கும்
அலமாரிப் பிள்ளையாரை!
***************************
மழைக்கால மரவட்டையின்
குறுக்கே
குச்சி நீட்டினான் ஜீவா...
சுருண்டு சுருண்டு
திரும்பிக் கொண்டது !
"நேத்து,ரயில் ஏன்
சித்தப்பா
இப்பிடித் திரும்பல...."
அபியின் கேள்வியில்
தண்டவாளத்தில்
குண்டு வைத்துத்
தகர்ந்த ரயில்
நகர்ந்து கொண்டேயிருந்தது.....

வெள்ளி, மார்ச் 09, 2012

குருவே சரணம்

தகிப்பின் அச்சமோ 
ஒளியின் பிரமிப்போ  
நீள,அகல,தூர 
பிரக்ஞையோ 
இன்றி .....
பறவைகள் பறக்கின்றன 
சூரியனைத் 
தாண்டியும்,சுற்றியும் 
குறுக்காகவும்....   


வியாழன், மார்ச் 08, 2012

அபி உலகம் -6



தாத்தாவும் அபியும் பூங்காவில்...


"சறுக்குமரம் போறியாம்மா?"
"நம்ம தெருவிலே இருக்கே

  

அது என்ன?"
"அது வேப்பமரம்.. "
"தோ...அது... "
"அரசமரம்டா..
அந்தப்பையன் இறங்கிட்டான்...
வாம்மா..."
"இந்த மரத்துல
ஏன் எல(இலை) இல்ல..?"
அன்றுதான் தாத்தா
சறுக்குப்பலகை
சொல்லப்பழகினார்...
***************************
தன் ரயில்
கவர்ச்சி வண்ணங்களில்
இல்லாத ரயிலை
அபி ரயிலென்று ஏற்கவில்லை!
ரயில் மந்திரி முகவரியோ,
ரயில் பொம்மை செய்பவர் முகவரியோ
தேடுகிறார்
அபி அப்பா -முறையிட ...
***************************

செவ்வாய், மார்ச் 06, 2012

வெயில்நதி சிற்றிதழுக்குப் படைப்புகள் அனுப்ப veyilnathi@gmail.com அபி உலகம்-5


  

சரியாகப் படிக்காத
டூடூவின்
காது திருகிவிட்டு
உடனே
தடவிக்கொடுத்தாள் அபி
அம்மாவுக்குப் பாடம்.
*****************************
வண்ணக் குழம்பான
கைகளை ஆட்டி ஆட்டி
அபி பேசிக்கொண்டிருந்தாள்...
வரைந்த சித்திரங்களுக்குப்
பேச்சுப் பயிற்சியாம்...
**************************
பூத்தது ஒற்றைத்தொட்டி
மகிழ்ந்த அபி
நிறைய தொட்டி
வாங்கலாம் என்றாள்.
பரப்பு கருதி
எரிச்சலான அம்மா
நாம எங்க போறது?
என்றாள்..
அதுல ஒரு தொட்டிக்கு ....
அபியின் தலை சாய்ந்த விடையில்
அம்மாவுக்கு
 தானும் அவளும்
இருமலரான உருவம்...தோன்றியது!.

சனி, மார்ச் 03, 2012

நழுவிய கணம்


 
பட்டாம்பூச்சி 
வண்ணங்களின் மின்னலாய்ப் 
பறந்தது ஒருகணம்...
பார்த்தது 
பார்க்காது -
ஏழு கடல்,ஏழுமலை,
ஏழுவானம்,ஏழுசூரியன் 
தாண்டிக் கொண்டேயிருக்கிறது 
மனம்.....
தேடல் தொடர்கிறது..
சூரியனின் ஆரஞ்சுச்சாறு ,
வானின் நீலபானம் 
பருகி இளைப்பாறியபடி 
மீண்டும் ,மீண்டும்....
அதே நிறச்சாயல் தேடுகிறது ...
அந்த நிறம் 
அதே நிறமா...
பனியில்,வெயிலில்
இளந்தூரலில்,
பருவங்களின் பாய்ச்சலில்...
கரையாது காணக்கூடுமோ ..
தேய்ந்த  நிறம் தெரியாமல் 
தாண்டிடும் சாத்தியம் 
ஏற்காது.. 
தேடல் தொடர்கிறது..
                               

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...