சனி, மே 12, 2012

பூட்டாத பூட்டுக்கள்


 May 11,வல்லமையில் 

பூட்ட ஏதும் 
பொருளிலாத போதும்
பூட்டிச் செல்வது 
வழக்கத்தின் காரணமாய் 
நிகழ்கிறது.
கதவைத் திறக்கும்போது 
ஞாபகமாய் 
மனசைப் பூட்டிக் கொள்ள 
வேண்டியிருக்கிறது …..
உள் சுவர்களெங்கும் 
பிறர் அறியாப் 
பூட்டுகள் 
தொங்கிக்கொண்டே இருக்கின்றன …..
தேவைக்கேற்ப 
அவரவர் 
எடுத்துக் கொள்வதுண்டு 
சிலசமயம் 
தனக்கு….
சிலசமயம் 
பிறர் வாய்க்கு….
பலசமயம் விஷயங்களுக்கு ….
எப்போதும் கனவுகளுக்கு

 

புதன், மே 09, 2012

நாற்காலிப்பிசின்

மே 8 கீற்று இணையதளத்தில் வெளியானது 
நான்கு கால்களிருப்பதால் 
என் நாற்காலியும் 
உனதும் ஒன்றல்ல.
உன் நாற்காலியின்                                                  
நான்கு கால்களிலிருந்து 
வேர்பரவி 
நாற்றிசையும் வியாபித்திருப்பதை 
உலகறியும்.
கையிலிருந்து 
நழுவும் பாதரசமாய் 
என் நாற்காலியை 
எனக்கு ஒட்டாமல் 
உருட்ட 
உன்னால் முடியும் என்பாய்.
சுட்டுவிரல் நீட்டி 
என்னுடையதன் 
நான்கு காலும் முறித்து 
அந்தரத்தில் -
இருக்கை மட்டும் 
ஆடவைத்து அச்சுறுத்துவாய்...
இருக்கை அடியில் 
முள்ளோ, குண்டோ,
எனப் பூடகமாய்ப் 
பார்வையால் வெருட்டுவாய்...
இருக்கை 
எனக்கு கௌரவமன்று ..
உன்னை நினைத்தே 
என் கவலை...
வேரோடியிருக்கும் 
நாற்காலியின் கால்கள் 
வேறொருவர் கால்களை 
நோக்க நேர்கையில் ,
உன் இருப்பு.....?

செவ்வாய், மே 08, 2012

இருந்தேன்....இருக்கிறேன்....இருப்பேன்...

மே 7 உயிரோசையில் இடம் பெற்றது

வியந்ததும்,ரசித்ததும்,

 கொண்டாடியதும்
நீதான்....

துளிர்பச்சை,அடர்பச்சை,

இலைப்பச்சை என்பாய்....

பழுப்பு படர்கையில்

அசுவாரசியம் மேவ,

சருகு கண்டு

சலிப்பதும் உண்டு...

சூரியன்,ஆடு,புழுதி,

மழை,நிலா.....

எப்போதும்,

நான் இருக்கிறேன்

இலையாக.....

வாழ்வைக் கொண்டாடிக்

கைதட்டும் 
ஒரு தருணம் ,

சருகாகி

உதிர்ந்துவிட்டேன் என்பாய்...

நான் இருக்கிறேன்
இன்னொரு துளிரில்......

திங்கள், மே 07, 2012

பௌர்ணமி எனது நாளல்ல....

தேர்ந்த பாடகியின் 
பழகிய தம்புரா போல் 
பழைய ஜன்னல் 
வளைவு போல்,
புதிய கைப்பிடிச் சுவர் போல் ,
என் 
குட்டித் தலையணை போல்,
பிரபஞ்சப் பயணத்தின்
பிடிமானம் போல் 
பற்றிக்கொள்ளவும் 
சாய்ந்து கொள்ளவும் 
துண்டு நிலாவே 
தோதானது.

சனி, மே 05, 2012

கரிந்த சொல்

மே  2 அதீதம் இதழில் 

மினுக்கி உதிர்ந்த 
நட்சத்திரம் 
கடைசியாய் 
ஏதோ சொல்ல விழைந்தது….
அதற்காக இறங்குகிறது 
என்றே 
காத்திருந்தேன் நெடுநேரம் ….
ஒளித்துகள் 
இலக்கிலா விலக்கில்
வீழ்ந்திருக்கலாம் போலும்!
நிலா மீதான குற்றச்சாட்டோ ,
இடித்துத் தள்ளிய 
இதர நட்சத்திரம் மீதான 
மனத்தாங்கலோ,
என்னருகே 
சோம்பலாய்ச் சுருண்டிருந்த 
பூனைக்கான கேலிச்சொல்லோ…..
நட்சத்ரா …
என்ன சொல்ல விழைந்தாய்?

வெள்ளி, மே 04, 2012

மோகினிச் சொல்

.ஏப்ரல் 30 கீற்று இணைய இதழில் வெளியானது 

ஒரு சுள்ளிக்கட்டு சுமந்து சென்றாய் நீ

சிறியதும், பெரியதும், நீளமும், குட்டையுமாய்
அடக்கி மடக்கிக் கட்டி வைத்திருந்த கட்டுமீறி 
ஒரு சுள்ளி பாதையில் விழுந்து விட்டது.
பின்னால் வந்த ஒருவன் எடுத்துப்பார்த்தான்.
"கோடு போலிருக்கே...."
இன்னொன்றைத் தேடி வைத்து இணை கோடாக்கினான். 
பக்கத்திலிருந்தவன், கேலிச்சித்திரக்காரன் போல்
ஒரு வளையத்தை மேலே வைத்து,
"தலையும்,கையும்" எனச் சிரித்தான்.
கேட்டுக் கொண்டிருந்த மூன்றாமவன்,
தோதான இன்னும் இரு குச்சியால் 
உடல் கொடுக்க, உயிர் கொடுக்க வந்தான் மற்றவன்.
ஆடை ஒருவர் தர,"மூளியாக இருக்காதே" என 
ஆபரணம் சூட்டினாள் ஒருத்தி.
பால் பழத்தோடு ஒவ்வொருவர் போஷாக்கு தர,
லாஹிரி வஸ்துக்களோடு சிலர் சந்தித்ததாகவும் கேள்வி!
மறுநாள் நீ திரும்புகையில் 
ஒற்றைச் சுள்ளி மோகினி அங்கே உலவுவதாகவும் 
சூட்சுமக் கயிற்றின் முனை பிடித்தவாறு 
வழிப்போக்கன் வெகுகாலம் முன்பு கடந்துவிட்டதாகவும் 
கதைத்துக்கொண்டிருந்தார்கள் .....
உன்னிடமும் சொன்னார்கள் "எச்சரிக்கையாக இருக்கும்படி..."

வியாழன், மே 03, 2012

பயண வழியில்.....

  ஏப்ரல்30 உயிரோசையில் வெளியானது

 
ஓடத்தின்
நுனிப்பறவையாகவும்.,

நீர்விழு நிழலாகவும், 

தூரவானின் சாட்சிப் பறவைகளாகவும் ,

தொடாது போகும் மேகமாகவும் ,

தொங்கும்

கூண்டு விளக்காகவும்,

 அதனுள்ளிருக்கும்

 துளி ஒளியாகவும் ,

ஓட வளைவாகவும்,

நீர் கிழிக்கும் துடுப்பாகவும்,

 ஓடா நீல அலையாகவும்,

 எவ்வெப்போதோ

 நான் இருந்திருக்கிறேன்.....

ஓடத்தினுள்
சாய்ந்திருந்த நினைவு மட்டும் இல்லை...

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...