ஞாயிறு, மே 05, 2013

என் கடன்

மெல்லக் கால் நனைத்துக்
குதித்துக் கும்மாளமிட்டு
வெளுத்த பாதங்களுடன்
மனமின்றி
நாளைய நனைதல் நினைவுகளுடன்
கரையேற்றி அனுப்பிய
நுரைமிதக்கும் நதி -இன்று
வற்றி மெலிந்த ஒற்றைத்தட
சிற்றோடை...


நாளை நான் வருகையில்
கான்க்ரீட் பொந்து தள்ளும்
கழிவு நீரருவி வழிய வழிய
சாக்கடையோரக் கொசு
விரட்டியபடி விரையலாம்...


ம்ம் ....
மறக்காமல் வாங்க வேண்டும்
தண்ணீரின் தேவை குறித்த
புதிய நூல்..
கடக்காமல் பகிரவேண்டும்
முகநூலின்
தண்ணீர் தகவல்களை

வியாழன், மே 02, 2013

வானம் வழங்கித்தான் பழக்கம்

இருள் விலகாப் புலரியில்
ஏதோ ஒரு கிணற்றடி
வேம்பிலமர்ந்து -கூவுவது
குயில் என
நான் அறியாக்காலம்வரை
அங்கே இருந்தது குயில்...

புலரியின் தேவதைக்கு
தங்க விசும்பு
தயாரிக்கச் சொல்லியிருக்கிறேன்
ஏனோ என் கிரீடம்
முனகிக் கொண்டே இருக்கிறது...
..
அட ... இந்த சிறகுத் தொப்பியை
கிரீடம் எனத்தான் சொல்வேன்...


போதும் ..
நான் ஒருபோதும் பார்த்திரா
வேம்புக் குயிலின் சிறகும்
இதில் இருக்கும்
என்றெல்லாம் வதந்தி பேசாதே..

.
புறப்படு .....
அந்தத் தங்க விசும்பை
அட்சய திருதியை அன்று
கொண்டுவந்துவிடு...!

சனி, ஏப்ரல் 27, 2013

அவளுக்கு என்னவென்று பெயர்

அவள்....
தூரிகை பழகலாம்...
நல்ல மாவறிந்து
பூரிக்கும் ரொட்டி சுடலாம்....
இயந்திரம் பொருத்தலாம்
திருத்தலாம்...

தங்கம் விலை பார்த்துப்
பொருமிப் புலம்பலாம் .....
அலங்கார பூஷிதையாய்
அபிநயம் பிடிக்கலாம் ..
தெருக்குழாயருகே
சண்டையில் கூந்தல் பறக்கலாம் ..
காதணி இழைந்தாட
கானம் படிக்கலாம்...
வரிசைகளில் மேலும் ஒருத்தியாய்
கால்கடுக்கலாம்...
நிலவிலும் நடக்கலாம்..

கழிப்பறை சென்று
பத்திரமாய்த் திரும்பி விட்டாளா ..?
பார்த்துவா..

வியாழன், ஏப்ரல் 25, 2013

மண்ணரசி

நம்பிக்கையின் இதழ்கள்
சேர்ந்த கணம்
நானறியேன்...
கரையிலிருந்து "மொட்டு.."
எனப் பெயர் சூட்டினான்...
நகரவா,எழும்பவா,
மிதக்கவா,விரியவா,
சேரவா,தனிக்கவா...
இதழ்களைவிட
மேலதிக வினாக்களோடு
இலையுரசிப் பிரிந்து
அலைமோதிக் கிடக்க...
நீ
ஆகாயத் தாமரை
எனக் கூவி விடாதே....
நீராகாரம் பருகி வாழும்
பழமைவாதி நான்...
காற்றருந்தி வாழ இயலாது

வெள்ளி, ஏப்ரல் 19, 2013

பொருளறியாமல் .....




அலைகளினூடே சாய்ந்து ,
சரிந்து....
அடிவைக்கும்  பாதங்களை,
துடுப்புகளின் தீண்டலை,பாய்ச்சலை
 சுடுகதிர்களின் ஆக்கிரமிப்பை,
நீர்த் தட ஆறுதலை ,
உலவலின் விறுவிறுப்பை ...
எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன
கரையோர ஓடங்கள் ...


மௌனித்துக் கிடக்கிறது கரை...

முகட்டின் இப்புறமான
நதியின் தடமறியாது
மலையேறிக் கொண்டிருக்கிறது
கூட்டம்.

செவ்வாய், ஏப்ரல் 09, 2013

வண்ணம் வளர்ப்பேன்




ஒரு சோப்புக்குமிழுக்குள்ள 

உரிமையாவது வேண்டாமா....?



உன் கற்பித  நிறங்களைக்
கவிழ்த்துக் குழப்பித்
தீற்றி
த்தடவி
என் வானவில்லை
வரையாதே ..


ஏழு நிறங்களுக்கும்
இடம் வேண்டுமே
என்பது  உன் பொய்க்கவலை.


இரண்டே நிறக் கீறலையும்
வானவில்லாக
வளர்த்துக் கொள்வேன்..
விலகிப்போ...உன் குழம்புக் குவளைகளோடு..!

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...