செவ்வாய், டிசம்பர் 10, 2013

எங்கே நீயோ

வல்லமையில் நேற்று...
                         9 12 13http://www.vallamai.com/

--பிரியம் சொல்லில் தளும்பல்
உன் ப்ரியம்
கருணை கண்ணில் வழிவது 
பார்வைக்கு அழகு 
பார்ப்பவர்க்கு அழகா ..?
என் ஆன்மாவை 
துடைத்துத் தூபம் காட்டி 
இறுகப் பூட்டிவிட்டேன் 
புற அழுக்கு குறித்த அச்சமென்றாய் ..

அழுக்கு தின்று மூச்சு விடும் 
மீன் அது என்பதை அறியாயோ 
அகவிழி திறந்து ஆன்மாவை 
உலவவிடு... 
தடாகம் முழுக்க துள்ளிப் புரண்டு 
நீந்தும்போதில் 
நீயும் கற்பாய் பிரியமும் கருணையும் 
விரல் வழியும் வழியும் என்பதை...
  

சனி, டிசம்பர் 07, 2013

நனவிலி

உன் சொல்லுக்காகக் காத்திருக்கிறேன் 
புதிய மொழி கற்றவன் 
எழுத்தெழுத்தாக இணைத்துப் பார்த்து 
மனசுக்குள் உச்சரித்து ஒத்திகை பார்த்து 
வெட்கமோ ஆர்வமோ தெறிக்கப் பேசுவது 
போல் 
நீ அன்பின் மொழிக்குள் 
அமிழ மாட்டாய் ...
தெரியும்...
வறுமை உணவே ஆடம்பரமாக்கியபோதும்
ஆவல் தின்பண்டக் கனவு தராதா என்ன....
நான் கனவிலிருக்கிறேன் ...


வெற்றுக் கோப்பைகளுடன் 
நீ வாசல் திறக்கிறாய் 

வெள்ளி, டிசம்பர் 06, 2013

நானும் நானல்ல

டிசம்பர் 6அதீதம் இணைய இதழில்


 நானொரு விருட்சம், நான் உதிரும் இலை,
மணம் கசியும் சிறுமலர்,
கனிந்து  வீழும்  பழமும் ,
அதனுள் கிடக்கும் வித்தும்
என ஏதோவொன்றாக  சித்தரித்து
வந்தபின் 

சுற்றிலும் நெளியும் சர்ப்பங்களைக்
கடக்கவியலா கானுயிர்
ஆனேன்  

நெளிந்து வளைந்த சர்ப்பம் 
பார்த்தபடி கடந்தது வாழ்வு ..

சில நாள் அச்சம்..
சிலநாள் அருவறுப்பு ..
சிலநாள் ஆர்வம்
சிலது வெகு நீளம்
வெகு சிறியது
வெகு அழகு கூட
நிறங்களோ வேறு வேறு
புள்ளிகளும் வரிகளும்
செதில் தீற்றல்களும்
ஒன்றுபோலில்லை மற்றது 


அரவம் பார்ப்பது வழக்கமாகிப்போனபின்
ஒருநாள்
நான்
அமர்ந்திருந்த மேசையில் சிந்தியிருந்த
துளி விஷத்தை
நானே துடைத்தேன் யாருமறியாமல்
அல்லது அவ்வாறு நம்பியபடி...

வெள்ளி, நவம்பர் 29, 2013

பூனை மீசையும் காட்சிப்பிழையும்


-- அந்த சுவர் சொல்கிறது 
நான் அதுவாய் ஒருபோதும் 
இருந்ததில்லை என்று....
ஆம்...நீயாய் இருந்திருக்கலாம் 
என்றுதான் இருந்தேன்...என்றேன்!

அந்த வெயில் சொல்கிறது 
நான் அதுபோல் தகிப்புடன் 
ஒருபோதும் 
ஒளிர்ந்தது இல்லையென்று...
ஆம்..வெளிச்சமோ,கணப்போ
எப்போதும் பற்றாக்குறையில்தான் 
எனக்கே என்றேன்...!

அந்தப் பூ சொன்னது 
என் இதழ் அடுக்கை நீ
ஒருநாளும் சரியாய்க் கணக்கிடவேயில்லை என்று..
மகரந்தம் வாசனை நிறம் என்று 
எதையுமே யூகிப்பதுதான் 
என் ரசனையென ஒப்புக்கொண்டேன் ...

என் காலடிப் பூனை 
சிரிப்பது போல் தோன்றியது...
பூனைகளின் மீசை அவ்வாறு 
போலிக் காட்சி காட்டுவதைத் தான் 
காட்சிப் பிழை என்றாயோ.....
-

ஞாயிறு, நவம்பர் 24, 2013

அவளுக்கு டிசம்பர் வருகிறது



காற்றழுத்தத் தாழ்வுநிலை.....
மழை வரும் ,வரலாம்,வரவில்லை....
புயல் கிழக்கே,தென்கிழக்கே,மேற்கே தென்மேற்கே..
கடந்தது,
மாறியது,
வலுவிழந்தது..
மண்டலவிரதம்,அவசரமாலை,
வேன்,கார்,ரயில்,பேருந்துநிரம்பும் 
பக்தர்கள்,
பிச்சி,சாமந்தி,பட்டன்ரோஜா,கதம்பத்தோடு 
ஒருபந்து டிசம்பர் பூவும் கட்டிவைத்து
இம்மாதத்தைக் கடக்கிறாள் 
கனகாம்பர  சீஸனில் பிறந்ததால் 

கனகா வான கனகா.... 

வெள்ளி, நவம்பர் 22, 2013

மண்ணாகப் போகுமுன்...

கீற்று இணைய இதழில் நேற்று(21 11 13)

வண்ணம் வெளிறிய, பூச்சு உதிரும் 
சுவர்கள் காத்துக் கொண்டே இருக்கின்றன 
எதையாவது கிறுக்கவும்,
நினைவூட்டும் கோடுகள் புள்ளிகள் இழுக்கவும்,
மஞ்சள் வட்டமும் குங்குமமும் 
தீற்றிப் பூசை போடவும் ,
தன்மேல் சாய்ந்தபடி கதைபேச,
மூக்கைச் சிந்தித் துடைக்க,
தோரணையாகக் கையூன்றி நிற்க ...
ஒரு படத்தை, கண்ணாடியை, வாழ்த்துமடலை
எதையாவது மாட்ட -
சுத்தியும் ஆணியுமாக இடம் தேட ...
யாராவது வந்து உறவு கொண்டாடி
வெற்றிலை கிள்ளியபடி மீதிச் சுண்ணாம்பைத்
தடவும் ஒரு நடுங்கும் கையும்
நெருங்காமல்
இடிந்தே போய்விடப் போகிறோமோ
என்ற நடுக்கத்தில் ...
இடம்பெயர்ந்த எவரேனும் மீள வேண்டுமென்ற
வேண்டுதலை
வீட்டுத் தெய்வத்திடம் வைத்தபடி

செவ்வாய், நவம்பர் 12, 2013

சில விஷயங்கள் ...

சில நேரம் பசுமை 
நம்மைப் பறவையாக அழைக்கும்..
சிலநேரம் நதியின் நெளிவு 
துளி மணலாய்க் கிடக்க இழுக்கும்..
சில நேரம் வெயிலின் 
சூடு பருக வேண்டித் தொண்டை வறளும்...
எந்நேரமும் தோன்றுவதேயில்லை 
சில விஷயங்கள் ...

என் சில விஷயங்களும் 
உன்னுடையதும் 
ஒன்றுதானா எனத் தெரியாதவரை 
அவை சில விஷயங்களே 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...