ஞாயிறு, அக்டோபர் 11, 2015

ஆடும் பாடு


துள்ளும் சில நேரம்
துவளும் சில நேரம்
மருளும்,மயங்கும் ,உருளும் ,உரசும்
மேகம் போலவே திரளவும் திரியவும்
பிரியவும் உடையவும் உருகவும்
ஊறவும்
பல்கிப் பெருகவும்
புள்ளியாய்ச் சுருங்கவும் செய்யும்
இதன் பெயர்தான்
ஆன்மாவா
சனியன் என்ன பாடு

இசை நின்ற பொழுதுகளில்
காலைப் பிராண்டும்
உன்னை எப்படிக் கொல்வேன்
நான் ஓடிக் கொண்டிருக்கும்
இசை நாற்காலிப் போட்டியின்
ஒலிவிசைக் கட்டுப்பாடோ
ஒரு

பித்தனின் கையில் 

பெரிய பள்ளம்



தோரணவாயில்,கட்அவுட்,பேனர்
எந்த இலக்கணப் பிழையுமின்றி
சகல ஆடம்பரங்களோடும்
நடந்து முடிந்தது திறப்பு(திரு)விழா

என் ஆயுசுல இவ்ளோ பெரிய
பாலம் பார்த்ததேயில்லை
வியப்புடன்
பேரனோடு வேடிக்கை பார்க்க வந்தார்
பக்கத்து ஊர் முருகேசன்

நுரை ததும்பி ஓடிய காலத்து
வெள்ளத்தில்
ஆடு மாடு ஏன் மனிதர்களும்
அடித்துச் செல்லப்பட்ட கதையும்
அளவான பெருக்கில்
ஆறு குடைந்து நீந்திய பெருமையும்
பேரனோடு பேசிக்கொண்டே
வந்து சேர்ந்தார்




பாலம் கட்டிய நீண்ட வருடங்களுக்குள்
வட்டம் மாவட்டம்  ஆனகதையும்
மாற்றுப்பாதையில்
கும்பகோணம் பில்ட்டர் காபி ,பரோட்டா கடைகளோடு
வாகனப்பழுது நீக்கும் கடைவரை
ஒவ்வொன்றாய்
முளைத்து புதிய நகர் வந்த கதையும் 
மனதுக்குள் தனியே ஓட
பாலத்தின் மேல் நின்று பார்க்கையில்
என்னவோ பரவசம்தான் அவருக்கு

கீழே என்ன தாத்தா
இவ்ளோ பெரிய பள்ளம் என்றான்
ஆறுகளின் வரலாறு அறியா
பேரன்

என் பெயர் நீலா

ருந்தி வருந்திச் சொல்கிறீர்களே 
என்றுதான் வாங்குகிறேன் 
டென்ஷனும் செலவும் நீள நீள
பத்துக்கு நாலு ஸ்கின் ப்ராப்ளம் ..
 
கரைத்துக் கரைத்து ஊற்றினாலும் 
நான் வளர்கிறேன் 
எனக் குதிக்காத பிள்ளை 
உங்களைப்போலவே  கிண்ணத்தில் குழைத்து 
ஊட்டியபோது களுக்'கெனச் சிரிக்காமல் 
தூவெனத் துப்பி,விழுங்கினால் 
வீறிட்ட செல்வமல்லவா 
 
அழுக்கு நைட்டியும் 
அதில் துடைத்த ஈரக்கையுமாக ஏற்றினால் 
டிசைனர் சுடிதாரில் வந்து சிக்கெனக் 
கொளுத்தாத காரணத்தால் 
கொசுக்களும் மடிவதில்லை 
 
நானும் யோசிக்கிறேன் 
குடும்பத்தலைவியாய் உணரமுடியாமல் 
வேலைக்காரிபோல் 
திரிவதன் காரணம் 
பிளாட்பாரம் நைட்டிதானோ என...
 
நிஜப்பெயரில் இதெல்லாம் 
பகிரமுடியாமல் 
புனைப்பெயர் சூடினேன் நீலா என்று ..
 
ஐயோ ..இதென்ன 
இந்தப் பெயருக்கு 
இத்தனை போட்டியா

சனி, அக்டோபர் 10, 2015

அடையாளங்கள்

பைத்தியக்காரத்தனத்தின் அடையாளங்கள் 
எவை எவையாக இருக்கலாம்
பறந்துகொண்டிருக்கும் மகிழம்பூக்களைப்
பொறுக்கி எடுத்துப் படம்பிடிக்கலாம்
அந்தப் படத்தைப்
போட்டு
தோழனுக்கு வாழ்த்து சொல்வதைக்
கவுரவமாக நினைக்கலாம்
முப்பத்தைந்து ஆண்டுகளுக்குமுன்
தன் கனவுக்கன்னி( பாத்தியதை எங்களுக்கும்உண்டுல்ல)
அணிந்திருந்த
ஜானி ஸ்டில் முத்துமாலையை
இப்போதும் தேடலாம்
லட்சத்தைத் தொட்டு விலை சொன்னால்
ஆயிரங்களில் அடைக்கலமாகலாம்

சகபைத்தியமொன்று
தேடிக்கொணர்ந்த புளியம்பிஞ்சுகளைச்
சுவைத்தவாறே இதைத் தட்டச்சலாம் smile உணர்ச்சிலை



ஆறுதல் புன்னகை

களிம்புகளும் ,பசைக்குழாய்களும் 
இறைந்து கிடக்கும் 
மேசையடியில் அமர்ந்துதான் 
தொலைக்காட்சி பார்ப்பது 
நறநறத்துக் கிடக்கும் 
மனசுக்கென்றும் 
ஒருத்தி புன்னகைப்பாள் 
என்ற நப்பாசையில் 
சின்னத்திரையை 
உற்று நோக்கிக்கொண்டே ....


18 5 15  கல்கியில் 

வெள்ளி, அக்டோபர் 09, 2015

சமூகம்


அருவருப்பாகத்தான் இருக்கிறது
நான்கு நாட்களாகப் பார்க்கிறேன்
குப்பைத் தொட்டிக்கு வெளியில்
உதிரக் கொத்தோ
உதிரிமலர் அழுகலோ
தெரியவில்லை.
அப்புறப் படுத்தப் படாமலே கிடக்கிறது.
யாருக்குத்தான் பொறுப்பிருக்கிறது.

ஆயாசமாக இருக்கிறது



எத்தனை பேரிடம் மல்லுக்கு நிற்பது
எத்தனை பேருக்கு சொல்லிக் கொடுப்பது

உடலைத் திறப்பதால்
ஒருவரை அவமானப்படுத்திவிட
இன்னும்எத்தனை
நூற்றாண்டுகள்வரை
இம்மூடர் கூடம் துடித்துக்கொண்டிருக்கும்

தின்றால் பாவம் கொன்றால்போச்சு
எனத் தலைகீழாக்குகிறீர்கள்

யார்வீட்டுத் துக்கமும் ஒப்பாரியும்
உங்கள்தூக்கம் கலைப்பதேஇல்லை

வயிறுஎரிவதே இல்லை
ரயில் தண்டவாளத்திலோ
தூக்குக்கயிற்றிலோ
எவர்வீட்டுச் சுடரோ
இழுத்து அணைத்துப் போடப்படுவதைக்
கண்ணுற்றபோதும்

அகன்றதிரைத்தொலைக்காட்சியின்
துல்லியம் காரணமாகக்
காண்பதெல்லாம்
சேனல்காரன் போட்டியில்
வாங்கிய திரைப்படம் என்றா
நினைக்கிறீர்கள்

ஆயாசமாக என்றாசொன்னேன்
இல்லை
ஆபாசமாக எனத் திருத்திக் கொள்ளுங்கள்

சே...வாயாரத்
திட்டத் தோதாக
ஒருபோலிக் கணக்கையாவது
ஆரம்பித்துவிட வேண்டும்
முகநூலில்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...