வியாழன், ஆகஸ்ட் 31, 2017

அடையாளங்களின் சுமை


புராணநாடக பாத்திரங்களின் 
பித்தளை கவச கிரீடங்களைவிடவும்
கசகசப்பாகவும் கனமாகவும்
துன்புறுத்துகின்றன 
இந்த அடையாளங்கள்
அம்மா ,மகள், மனைவி,
அக்கா தங்கை,அதிகாரி,அடிமை,
அவள்,இவள் ...
போதும் போதாதற்கு 
படிப்பு,பண்பு,பட்டறிவு வகையறாக்கள்
என்ன எரிச்சல்
என்ன கோபம்
என்ன ஆத்திரம்
ஆலகால விஷமெல்லாம் விழுங்கும் 
வேலையே பிழைப்பான சக்தி
கழுத்தை இறுக்கினாலும் திருநீலகண்டமாவதில்லை
அது நித்திய கண்டமல்லவா.
பொங்கும் உணர்வுக்கெல்லாம்
மண்ணை வாரிவிட்டு
வாசாப்புகளையும்
சேர்த்திறைத்த ருக்கு பெரியம்மாவை
ஊர் பிடாரி என்றது.
பரவாயில்லையென நினைத்தாலும்
இந்தப் பெயருக்கெல்லாம் பிடாரி பட்டம் தர்ரதில்ல 
எனத்
தள்ளி விடுகிறீர்களே

கடமை சார் கடமை

வாங்கித்தின்ற
பனிக்கூழ் வகை
அதில் தூவியிருந்த பருப்புத்துருவல் 
நினைத்தபடி அமைந்துவிட்ட வாடகை வீடு
சற்றே சகாயமாக வாங்க முடிந்த காய்கறி,கீரை
ஏங்கிய நிறத்தில் கிடைத்த சேலை
விஷமம் குறைவான குழந்தை
பசியிலும் சண்டையிடாத இணை
அவரவர் பெருமை அவரவர்க்கு
பெருமையில்லாததெல்லாம்
சிறுமையா என்ன
கடமை சார் கடமை

திங்கள், ஜூலை 10, 2017

பாஸ்பரஸ் பாசம்


அப்படி ஒன்றும்
நீயும் நானும் கொஞ்சிக் 
கொள்ளவில்லை
கடித்துத் துப்பிக்கொண்ட 

பாஸ்பரஸ் பாசம்தான் பலநாள்
இரண்டு நாளுக்கொருமுறையாவது
அழைத்தாலென்ன என்பது
புகாருமில்லை புலம்பலுமில்லை 

என்றுதான்
நீயும் மறுப்பாய்
சுயமரியாதைக்கும் 

கவன ஈர்ப்புக்குமான பந்தயத்தில்
தோற்ற பொழுதுகளை 

நினைவாக்கிப் போனாய்
வருவேனென்றால்
நீ பத்திரப்படுத்தும்
ஒரு துண்டு பூச்சரம் 

இப்போதும் கிடைக்கிறது உன் வாசமின்றி
ஏனிந்த நிழலாடல்
நான் நீ ஆகிக் கொண்டிருக்கிறேனோ அம்மா





நிலா நதி ரசீது

கரையோரம் 
காத்திருந்த போதெல்லாம்
கையிலிருக்கும் துடுப்பு
ஓடமேறும்போது
தவறிவிடுகிறது


****************************************
நிலா 
நடந்துகொண்டிருக்கிறது
கரையோர மரங்களூடே
நதியில் 

முகம்பார்க்கவியலாத போதும்
*************************************************

எந்த குற்றவுணர்ச்சி வழிந்தாலும்
ரசீதுகளால் துடைத்துக்கொள்ள முடிகிறது
பாக்யம் பாக்யம்

*************************************************************
பொய்,புரட்டு,ஏமாற்று
வஞ்சகம்,சூது,கொலை
பொய்,புரட்டு,ஏமாற்று
வஞ்சகம்,சூது,கொலை
பொய்,புரட்டு,ஏமாற்று
வஞ்சகம்,சூது,கொலை..
.....
...திரும்பத் திரும்ப தெரியாமல்
எழுதிவிட்டேனா எனப் பார்க்கிறீர்கள்
நூறு வரி கடந்து
வேண்டுமானால் ஒருமுறை
எழுதிவிடுகிறேன்
விசாரணை,வழக்கு,கைது
பிணை....வருடங்கள்.....

********************************************************






கொலைவாளினை எடடா

தலைகுப்புற விழுந்தவனைப் பார்த்து 
உச்சு கொட்டுகிறீர்கள்
அந்த தலையே காலென்று 

கண்டுபிடிக்கப்படும் நாளுக்காக
அவன் காத்திருக்கிறான்


***************************************************
உங்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள்
ஐயோ பாவம்
என்னென்னவோ படுபாடு படுகிறீர்கள்
அட டா
காக்காய் குருவிக்காக 
தண்ணீர் வற்றிப்போன 
நீர்த்தடம் பார்த்து கூட அழுகிறீர்களாம்
சற்றே காத்திருங்கள்
இதோ வந்துவிடுவார் தலைவர்
இப்போது என்ன செய்கிறாரா
அதிகப்பிரசங்கியாக இருப்பதுதான்
 உங்கள்
முதல் பிரச்சினை
போய் வாருங்கள்
பக்குவப்பட்ட பின் வந்து சந்திக்கலாம்
*************************************************************

இவ்வளவுதானே
என்பதே
கொலைவாளாகி விடக்கூடும்
அவ்வளவுதான்

*********************************************

எப்படி இப்படி

கொஞ்சமே கொஞ்சம்
என்னை எடுத்து
மேசையில் வைப்பீர்கள் ஒருநாள்
நேற்று அவனையும்
முன்தினம் அவளையும்
அதற்கும் முன் அவரையும்
இவரையும்
கிள்ளிக்கிள்ளி வைத்திருந்தது போலவே
உங்களுக்கு வேண்டியதென்ன
கிள்ளிவைக்க ஏதோ ஒன்று


***************************************************
   இது காற்றின் பாதை
அசைத்துவிட்டுத்தான்
போகும்
குறும்புச்சிரிப்புடன்
குறுக்கிடுகிறது கடல் 
***********************************************************
முகமிருக்கும்
தெரியும்
அது
இப்படியிருக்குமென்று
தெரியாது
எப்படியிருக்குமென்றே
தெரியாத ஒன்று
எப்படியிருந்தால்தான்
என்ன
******************************************************

ஞாயிறு, ஜூன் 18, 2017

செய்



அந்தந்த நிமிடத்தில் வாழ்வதன் சுமை 
தாங்க இயலாதிருக்கிறது
இதற்கு முந்தைய நிமிடத்திலும் 
இப்படித்தான் தோன்றியது என்பதை 
நினைவில் கொண்டுவந்து 
ஆறுதல் கொள்ள முயற்சிக்கிறீர்கள்
அது எவ்வளவோ இலேசாக இருந்ததே 
எனச்சொல்லியபடி
இந்த நிமிடத்தை இறக்க முற்படுகிறீர்கள்
சங்கிலி எங்கு பிணைத்திருக்கிறது 
என்பதைக் கண்டடைவதற்குள்
இதுவும் முந்தைய நிமிடமாகிவிடுகிறது


*************************************************************************
விருப்பம் என்பது விருப்பமற்றிருப்பதற்கு 
அருகில்தான் இருக்கிறது
ஒற்றைப்படை இலக்கத்திற்கு எதிர்ப்புறமாக
இரட்டைப்படை இலக்கத்தினை
அமைத்திருக்கும் குறைந்தபட்ச
இடைவெளி கூட இல்லாமல்
அடுத்தடுத்தே இருக்கிறது
அடுக்கு செம்பருத்தியின்
இதழ்களைப்போன்ற அமைப்பில்
எது விருப்பம்
எது விருப்பமின்மை என்று
அடையாளம் காண்பதை 
வாழ்நாள் வேலையாகச் 
செய்யப் பணிக்கப்பட்டிருக்கிறாய்
செய்

***********************************************************************************



வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...