திங்கள், ஏப்ரல் 30, 2012

ரோஜா ரோஜாவல்ல....

ஏப்ரல் 30 திண்ணை இணைய இதழில் 



சந்தேகமும் எரிச்சலுமாய்ப்                         
  
பார்க்கிறான் பூச்செடி விற்பவன்…
மஞ்சள்,வெள்ளை,
சிவப்பு,மரூன்,ஆரஞ்சு ..
இன்னும் பெயர் சொல்லவியலா 
நிறச்சாயல்களில்
எதையும் தேர்ந்தெடுக்காது 
எதையோ தேடும் 
என்னை அவனுக்குப்
 பிடிக்கவில்லை…
“மூணுநாள் கூட வாடாது,…”
“கையகலம் பூ….”
அவன் அறிமுக இணைப்புகளைக்
கவனியாது ,
“நா கேட்டது ….லைட் ரோசுப்பா …
இவ்ளோ பெருசா பூக்காது…
மெல்லிசா…சட்டுன்னு உதிரும்…
அந்த வாசனையே இதுல இல்ல்லியே….”
வாரந்தோறும் 
நான் தரும் மறுப்புகளில் 
என் நினைவில் படிந்த
ரோஜாவைத் தேடிக்கொண்டே இருக்கிறான் 
அவன்……

சனி, ஏப்ரல் 28, 2012

அது இதுவல்ல

ஏப்ரல் 27 வல்லமையில்வெளியானது




அது இதுவல்ல
கடிகாரம் எனச் 
சொல்லலாம்தான் !
ஆனால்…
உன்-இடது கையிலிருந்து 
அவிழ்த்தோ ,
என்ன செய்வதெனத் 
தெரியாமல் அடுக்கியுள்ள 
எண்ணற்ற அன்பளிப்பு 
சுவர்க்கடிகாரம்
உறைகளைப் பிரித்தோ
தந்து விடலாம் என 
நிம்மதி அடையாதே !
என் பதட்டம் வேறானது. 
அதில்தான் வைத்திருந்தேன் 
புதிய சமையல் குறிப்பு 
முயன்று பார்க்க,
மகனுக்கான வரைபடம் 
வரைந்து முடிக்க,
நாங்கள் நட்ட 
தென்னம்பிள்ளை பற்றி 
தோழியிடம் விசாரிக்க,
தலையணை அருகே 
அலைபேசியோடு
சுருண்டிருக்கும் அம்மாவின் 
நலம் கேட்க,
எல்லாவற்றுக்குமான 
என் மணித்துளிகளையும்…!
என்ன பெயரிட்டு யாரிடம்,
எவ்விடம் கேட்பதெனத்
தெரியவில்லை.
கடிகாரம் என்று மட்டும் சொல்லி விடாதே.

புதன், ஏப்ரல் 25, 2012

திரியும் பால்


ஏப்ரல் 23  உயிரோசையில் வெளியானது

முகம்..
        உடல்...
முகம்...
       உடல்...
தாவியலையும் விழிகளோடு
வழிதவறிய ஆடுகளை
அனுப்பியவாறு
உன் பார்வை...

தேடும்
சங்கடமணிந்து தொடர்கிறது
என்பார்வை...

சாவியாய்
இறைந்து கிடக்கின்றன
உரையாடலில்
நீ
மற்றும்
நான்
உதிர்த்த சொற்கள்...
                                           

உடை மாற்றும் கனா

ஏப்ரல் 23  வல்லமை இணைய இதழில் வெளியானது


உப்புக் கரிந்த
உதடுகளோடு
வியர்வையின்
வீச்சம் தாளாது
வேண்டுகிறார்கள்
வெள்ளுடைத் தேவதைகள்…..
சிலுவைகளை விடக் கனமான
சிறகுகளையும்
நடமாடத் தோதிலாது
தடுக்கும் ஆடைகளையும்
புறக்கணித்து
எளிதான புதிய
அவதாரம் எடுக்க வேண்டுமாம்.
யாராவது
கனவு காணுங்கள்…
ஓவியம் கற்றவராயிருந்தால்
கூடுதல் மகிழ்ச்சி!

தூறலுக்குள் இடி இறக்காதீர்

ஏப்ரல்  22 திண்ணையில் வெளியானது

-எடுக்கப்படாமல்
ஒலித்து நிற்கும்
 
தொலைபேசிமணி…
 
ஏகப்பட்ட
 
கேள்விக்கிளை விரிக்கிறது…
 
அச்சம்,எரிச்சல்,
 
ஆவல்….
 
ஏதோ மீதூர ,
 
மீண்டும்,மீண்டும்…முயலவேண்டாம்!
 
அந்த முனையில் ,
 
உக்கிரமான வாதம்
ஓடிக்கொண்டிருக்கலாம் !
 
உருக்கமான பிரார்த்தனை
பக்கத்தில் நடக்கலாம்..
 
கடன்காரனோ,
 
அதிகாரியோ,
திணறடித்துக் கொண்டிருக்கலாம்…
 
மரணச் சடங்கோ,
விபத்தோ,கூட்டமோ,
தவிர்க்கவியலா தவிர்ப்பாயிருக்கலாம்!
 
தவறவிட்ட உறக்கம்
நேரங்காலமின்றி
வாய்த்திருக்கலாம்.-

கனவின் சிறகுகள்



ஏப்ரல்22 கீற்று இணையத்தில் வெளியானது
நிலவின் கீற்றும் 
குளத்தின் சுவாசமும் 
மரங்களின் மௌனமும் 
புதர்களின் சிலிர்ப்பும் 

அவள் 
பின்னிய கரங்களின் 
விடுவிப்புக்காகவோ, 
சிறகுகளின் 
வீழ்ச்சிக்காகவோ...
காத்திருக்கின்றன.
ஒவ்வொன்றாக 
அல்ல ஒட்டுமொத்தமாக 
அகற்றப்படுகையில் 
அவள் 
வெள்ளுடை நனையாது 
சற்றே தூக்கி 
நீரின்மேல் 
நடந்து ...வனம் சேர்வாள்.

சனி, ஏப்ரல் 21, 2012

ஒளியின் வீடுகள்

வெளிச்சத்தைவிட
விளக்குகள்
மதிப்பாகிவிடுகின்றன
வெளிச்சம்
விளக்குவழிதான்                                                                    
வரமுடியும் என்றானபோது....
****************************
விளக்குகளை
உருவாக்குகிறவர்கள்
வெளிச்சத்தை
உருவாக்கிட முடிவதில்லை..
****************************
நேற்றிருந்த வெளிச்சம்
விளக்கினுள்
திரும்பாவிடினும்
புதிய வெளிச்சத்தைக்
கூட்டிவரும்
தோழமையுடன்
இருளை வரவேற்கின்றன
விளக்குகள்.
***************************
பழைய விளக்கு
புதிய வெளிச்சம்.

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...