செவ்வாய், அக்டோபர் 23, 2018

அல்லிக்குளக்கரை

நான் என்ன செய்யவேண்டும்
எப்போதும் என்னைவிட
உங்களுக்குத்தான் தெரிகிறது
போலவே நீங்கள் செய்யவேண்டுவது
எனக்குத்தெரியும் என்பதை மறந்துவிடுகிறீர்கள்
அல்லிக்குளத்தின் சேறு
கரையேறுகையில் கழுவியாயிற்று
கரையிலிருக்கும் கால்களின் சேறு....
அதைக்காணாது அல்லிக்கொத்தை ஏந்தி நடப்பேன் 

அதன் சுகந்தம் 
நிறம்போலவே அடர்த்தி


இரட்டைப் பின்னலுக்கு நடுவே தொங்கும் தைரியம்

கண்ணாடிக்குவளை சிலுங்கென விழுந்து நொறுங்கியது
பொறுக்கித் திரட்டியாயிற்று
குப்பையில் விழுந்த சிலுங்கும்
தரையின் சிலுங்கும் 
ராகதாளம் ஒன்றேயா
முன்பின் எங்கும் கீச்சாத பரிசீலனை
வேறெதுவும் தோன்றவில்லை


********************************************************
பை பத்திரமா
மண்ணா
செடியா
வேரா
கிளையா
துளிர்த்துக்கொண்டிருந்த குட்டிமல்லியா
ஏறத்துடித்த அவரையா
எதை விசாரிக்க
எதையும் கவனித்ததில்லை 

எல்லாம் தரையிலிருந்தபோது
****************************************************************
தலைக்குப்பின்னால் போய்விழுந்த ஓட்டுச்சில் 
சரியாகத்தான் விழுந்திருக்குமென்ற 
ஊகத்தில் குதிக்கும்போதும்
தைரியம்
இரட்டைப்பின்னலுக்கு நடுவே
மல்லிச்சரமாகத் தொங்கிக்கொண்டிருந்தது
மல்லி கதம்பமானாலும் 

கனகாம்பரமானாலும் அதே




விசிறியாய் ஆடும் முழுக்கை சட்டை

மிகச்சரியாக பொத்தான்கள் இடப்பட்ட 
அந்த கடுங்காப்பி நிற 
முழுக்கைச்சட்டையை நீ மடித்துவிட்டிருக்கலாம் 
என்று ஏனோ பட்டது 
வாசல்முன் இறங்கியபோது
லேசாக விசிறி போலப் 
பொத்தான் அவிழ்ந்து ஆடும் சட்டையோடு 
தூறலுக்காக ஒரு கையுயர்த்திய நெற்றி மறைப்பில்
சற்றே குனிந்து 
விரைவில் படியேறியபோது நீ நனைந்துவிடவில்லை
புதியவன் முகம்பார்த்து 
மிரண்டு படியிறங்கிய
சோனிநாய்க்குட்டியை 
நனையாது திண்ணையேற்றியபோது
வீட்டின் மனம் நனைந்துபோனது

ருருரூ ரூரூரூ மின்மினி

ருருரூ ரூரூரூ என்று தொடங்கிய 
ஜானகி
குரலைத் தாழ்த்தி 
மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது
என்று சேர்ந்துகொண்ட வாசு
அப்போது மொட்டையாகியிராது 
எண்ணெய் வழியும் கிராப்பு தலையும் 
பெரியகாலர் சட்டையுமாக 
எங்கோ பார்த்திருந்த இளையராஜா
கொடுங்கோலர்களே...
எத்தனை காலங்கடந்தும் 
இப்படிப் படுத்துபவர்களை பின்னெப்படி அழைப்பது

நேற்றைய மலர்

எல்லாம் முக்கியம்தான்
யாருக்கு எது 
என்பதில் இருக்கிறது
யார் 
யார் என்பது

*****************************************
ஞாபகநதியில் நுரைத்த புனலோடு மிதந்து வந்த
நேற்றைய மலர் இன்றாவது கரை சேர்ந்திருக்கலாம்
கைக்கெட்டும் தூரத்திலாவது வந்திருக்கலாம்
எத்தனைகாலமும் இப்படியே
நேற்றைய மலராகவே மிதந்துகொண்டேதானா.
****************************************************
ரொட்டியும் வெண்ணெயும் சர்க்கரையும் 
மூடிவைத்துவிட்டு
சாரலை மென்று கொண்டிருக்கிறேன்
வளைந்து வளைந்து இறங்கும் 
மலைப்பாதையின் விளிம்பில்
ஆழத்திலிருந்து தவித்தேறி
ஆடிக் கொண்டிருந்தன
மலர்க்கொத்துகள்

*********************************************************************
படம் ராஜி சுவாமிநாதன் 

உரையாடல்களின் தேசம்


................
அதிகப்பிரசங்கி
பட்டிவாய் என்றெல்லாம் 
காலகாலமாக வையும் 
மெல்லினப் பதங்களை 
நன்கு இறுக்கி முறுக்கி
நெகிழிப்பைக்குள் திணித்து
வீசியெறி முதலில்..

ஸ்வச் பாரத்

கேள்வி என்பது பதிலுக்கானது என்ற
மூடப்பழங்கதையோடு
விடாது கேள்விக் கல் போட்டுக்கொண்டிருக்கும் காகங்களே..
சாடி நிரப்பவே உங்கள் காலம் போதாது 
இதுவோ ஆழ்பாழ்கிணறு
மந்தையாய்ப் பின் வரும்
வரம் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது
பிறவிப்பயன் எய்தினீர்
***
தேர்ச்சட்டகங்களின் மேல் 
அகன்ற மார்பு விம்ம விம்ம நின்றபடி
கரமுயர்த்தி ஆசீர்வதிக்கும்
உங்கள் அழகிய லட்சமதிப்பு துவராடைகளின் 
வெளிச்சத்துக்காக 
கூசும் கண்மூடிச் சற்றே நின்றமைக்காக..
என்ன தின்ன
என்ன உடுக்க
எப்படி நிற்க
எப்படி நடக்க
யாரை நேசிக்க
யாரை வாசிக்க
யாரை வணங்க
யாரைத்தூற்ற
எல்லாம் உங்கள்
சுட்டுவிரலுக்கு உரிமையாக்கவா

எம் சோற்றில் உப்பு உண்டு
இன்னும் கொஞ்சம் துப்பு உண்டு
இது உரையாடல்களின் தேசம்
ஒற்றைக்குரல்களின் சந்தைமதிப்பு 
சட்டெனப் பாதாளம் போகும்
அக்டோபர் 1 முகநூல் வழி த மு எ ச க வழி வெளியானது 

சரிகை புல்லாக்கு மினுங்க

செல்லாத்தா செல்ல மாரியாத்தா 
மிதந்து கொண்டிருக்கிறது பந்தலில்
திருவிழா வரிசையில் வாங்கிய
புளியோதரைத் தொன்னையைத் 
தலைநடுங்க நிற்கும் மாரிக்கிழவியிடம் 
கையளித்துவிட்டு
ஒருநிமிடம் நின்று
அரைஞாண்கயிற்றில் காற்சட்டை ஏற்றியபின் 
வரிசைக்கு மீளும் அப்புவைப் 
பார்த்துதான் சரிகை புல்லாக்கு மினுங்க 
புன்னகைத்தாள் கழுத்துமாரி
அதை எல்லார் ஈஸ்வரி பார்த்துவிட்டார் போல
இந்தக் கண்களிருந்து என்ன பயனென்று 
சொல்லடி நீயாத்தா
தேர்முட்டி தாண்டி எதிரொலிக்கிறது

காமதேனு அக்டோபர் 1 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...