இடுகைகள்

சாலையோர அங்காளம்மை

படம்
பூச்சொரிதல் ஏற்பாடுகளின் 
தடபுடலைப் பார்த்தபடி சிரித்திருக்கிறாள் 
ஆற்றோர வெள்ளந்தாங்கி அம்மை
மணல் லாரிகளைக் காத்திருக்கும் இப்போதும்
அதே பெயர்
அசௌகரியமா இல்லையா 
எனத்தெரியவில்லை

*******************************************
வீசிப்போகும் காணிக்கைகளின் டங்டிங் ஒலியோடு
தனித்திருக்கும்
சாலையோரக்
கொட்டகையின் அங்காளம்மைக்கு
இளநீர்க்குலைகளோடு வாசலில் கடைவிரிக்க 
செல்லம்மை வந்தால்தான்
மனுஷவாசம்
செல்லம்மை 
அரிவாள் வீசும் அழகைப் பார்த்து
ரசிக்கும்போது சிந்திய புன்னகைதான் 
உறைந்து கிடக்கிறது அங்காளி சூலி முகத்தில்


********************************************************************

பெயர்ப்பலகையின் பூச்சரம்

படம்
உப்புக்கடலை ருசிக்காமல் 
சிப்பி தேடிக் கொண்டே 
அலைகிறாய் 
மீனென்றும் சொல்கிறாய் 
ஏதாவது ஒன்றைத்தான் புரிந்து கொள்ள 
முடியும்


**************************************************
நீலமாய் இல்லாத அவுரி
நீலம் தருகிறது
வானென்று
சொல்வதையும்
கடலென்று சொல்வதையும்
நிறுத்தி
அவுரி என அழைக்கிறேன்.
இருப்பதல்ல பெறுவது நீலம்
என உணர்ந்தபிறகு


*******************************************
எப்படிச் சொல்வீர்கள்
தினந்தோறும் கடக்கும் பாதையின்
பெயர்ப்பலகையும்
அதில் தொங்கும் வாடிய சரமும்
யாரை நினைவூட்டுமென்று 
அவரவர்க்கு அவரவர் கிளை


****************************************************
இதழ் இதழாய்ப் பிய்த்து மெல்லுகிறவரிடம்
என்ன சொல்ல
என் மனதுக்கு சொல்லிக் கொள்கிறேன்
சாந்தி ...சாந்தி...சாந்தி


******************************************************

காலமே நீ வாழி

படம்
இங்கேதான் இருக்கிறோம்  இல்லாமலும் இருக்கிறோம்  இருக்கும்போதும் 
இல்லாதபோதும்

*****************************************
வருத்தங்களைப் பிட்டுத்தின்றபடியே ஒரு ஸ்மைலி  போட வாய்ப்பளிக்கும்காலமே நீ வாழி

**********************************************

உப்பு உறைப்பைச்
சரிபார்த்தபடி முடிகின்றன நாட்கள்
அவர்கள் செய்யும் துரோகங்களைப் பற்றி
நினைக்கும் போது புரையேறுகிறதுதான்
தண்ணீர்க்குவளை அருகில்தானே
போதும்


*****************************************************

கதவு திறக்கப் 
பார்த்திருந்தோம்
வெளியேற
காற்றுகூட இல்லையென உணராது


***********************************************************
கனவின் சீதனம்

படம்
இந்த முகத்தை மறந்திருக்கவே கூடாது
ஆயினும்
எங்கேயோ பார்த்த சாடையிலும் 
ஒருநாள்
தோன்றுகிறது
*****************************************************

கனவுகளுக்கு அர்த்தம் உண்டா என்ன
நினைவுக்கே இன்னும்
தெரியாதபோது

*************************************************

கூரையில் வழிவதற்கும்
சன்னலில் இறங்குவதற்கும்
வேறுபாடு தெரிகிறது
மழைக்கு
சப்தத்தாலும் ருசி

************************************************
அத்துணை நஞ்சையும்
அள்ளிப்பருகச் சொல்லும் வாழ்வை வாழ
ஒரு கோப்பை சீதனம்
தந்தது நீயா
*******************************************

கட்டிடங்களிலிருந்து வெளியேறிவிடலாம்
கட்டுகளை என்ன செய்ய
முளைக்குச்சி அத்தனை ஆழம்
கட்டுக்கயிறு அத்தனை இறுக்கம்

******************************************************
ஜனநாயகம் வாழ்க

இந்த மௌனம் அச்சுறுத்துகிறது
இந்த பாராமுகம்
கோழைத்தனமானது
இந்த பாசாங்கு
பழிக்கத்தக்கது
இந்த பொறுப்புத்துறப்பு
வெறுப்புக்குரியது
ஓங்கிய அரிவாளின் கீழ் 
தன் தலை வரும்வரை
இப்படியேதான் 
இருக்கப்போகிறதா இக்கூட்டம்

வாழ்வு

படம்
என்ன பிடித்திருக்கிறதென்று 
கேட்பதில்லை
ஏன் என்பதை அவசரமாகக் கேட்டுவிட்டு
பார்வையைத் திருப்பிக் கொள்கிறீர்கள்
அந்தக் கழுத்து 
குளிர் கண்ணாடி அணிவதில்லையே தவிர 
அதே கண்கள்

*************************************************

எங்கே அதைப் பார்க்கப்போகிறீர்கள்
இப்படியாவது பார்க்கட்டுமே என்று
அடுப்பின் முகப்பில் Butterfly
அரைபடும் வாழ்வில் 
ஆசையை நினைவூட்ட ஒரு preethi
அவியவும் வேகவுமே வைக்கும்
புழுங்கல் வாழ்வின் மக்கர் பயணத்தில் 
குக்கர் பெயரில்
Prestige

*****************************************************
குளியலறை துவாரத்தில கட்டெறும்பு வரிசை
கண்டதும் மருந்தடித்தாயிற்று
மற்றபடி ஜீவகாருண்யத்திற்கொன்றும்
குறைவில்லை
வாசலில் இப்போதும்
அரிசி மாக்கோலம்தான்

***************************************************
ஏதாவது செய்துவிடமுடியும் 
என்று தோன்றுகிறது இப்போதும்
இது அவநம்பிக்கையா
எனக் கேட்டுக்கொள்கிறேன்
மூடநம்பிக்கை என்று மட்டும்
சொல்லிவிடாதீர்கள்
******************************************


பகீரதப் பிரயத்தனம்

படம்
நீங்கள் இருப்பதை நீங்கள் உணர
யாரையாவது அச்சுறுத்த வேண்டியிருக்கிறது
கண்ணுக்கருகே ஆடும்
கடப்பாறையைப் பாராதது
போல 
பயத்தை விழுங்க வேண்டியிருக்கிறது
எவர் சிரித்தாலும் திடுக்கிட
வேண்டியிருக்கிறது
எவர் கதறுகையிலும்
பஞ்சுமிட்டாய் சாப்பிட வேண்டியிருக்கிறது
பூமியே நழுவினாலும் ஆடாதமாதிரி 
நிற்க வேண்டியிருக்கிறது
எப்போதும் எவருடைய உணவையோ 

உணர்வையோ
களவாட வேண்டியிருக்கிறது
பாவமாகத்தான் இருக்கிறது
எவருக்கோ நடக்கும்வரை....