திங்கள், நவம்பர் 07, 2016

கடந்த எழுத்து

சென்ற காலங்களில் சிந்திய புன்னகை
காற்றிலேயே 
கரைந்து போயிருக்குமென்று நம்பியிருந்தேன்
அதே பருவத்தின் திரும்பலில் 
ஒரு முல்லைப்பூ இப்படி 
அகழ்ந்தெடுத்துக் கடைபரப்பி
அழவைக்குமென அறியவில்லை
பழைய காகிதங்களைக் கழிக்கும்போது 
திடுமென ஒரு கையெழுத்து பாதி அழிந்து
மீதி அழிக்க கண்ணீர் 

பொங்குமெனத் தோன்றவில்லை
கடந்தவையெல்லாம்
கடந்து விடுவதில்லை




அது போலில்லை

ஒரு பெருவனம்
ஒரு சிறுநதி
இரு இளம்பிடி
எங்கோ கேட்ட கதையின் 
தொடக்கம்போல இருக்கிறதா...
தொடக்கம் போல 
தொடர்ச்சி இருக்க வாய்ப்பில்லை
இன்னும் சொல்ல வேண்டுமா





இயக்கிய மலர்

மலர் ஒன்றோடு உரையாட நேர்ந்தது
முதல் கேள்வியே 
கொஞ்சம் அசைத்துவிட்டது போலும்
இப்படி ஒற்றைநிறமாக இருப்பது 
அலுப்பாயில்லையா ?
கொஞ்சம் வேறு வண்ணமும் கலந்திருந்தால் 
கவர்ச்சியாக இருக்குமே என்று வருந்தியதுண்டா?
தேவையில்லா தொந்தரவுக்கு 
ஆட்பட்டுவிட்டதைப்போல
காம்பின் நுனிவரை 
வளைத்து வளைத்து ஆடியபின்
என் நிறம் என் பெருமை
நீ கேட்டதுபோல் ஏங்க ஆரம்பித்திருந்தால்

யுகங்கள் கடந்து 
என் வர்க்கத்தை வளர்த்திருக்க முடியாது
இல்லாதது பற்றியோ இழந்தது பற்றியோ 

கலங்குவது 
இயக்கத்துக்கு எதிரானது என்றது
பழக்கதோஷத்தில் 

அது எங்கோ உறுப்பினர் எனக்கருதி 
நகர்ந்துவிட்டேன்


இடிந்த வாழ்வு

எல்லாம்தான் நடந்திருக்கும்
எல்லாரைப்போலவும் நடந்திருக்கும்
நாய்அலைச்சல் அலைந்து 
உண்ணாமல் உறங்காமல் உடுத்தாமல் 
இழுத்து இழுத்துப் பிடித்தது போதாமல்
கையெழுத்துக்களால் உயிர்ப்பித்த
கனவுகள் இருந்திருக்கும்
தேடித்தேடி தேர்வு செய்து
கொஞ்சம் அப்படி இப்படிதான் 

இருக்குமென்று பொய்யைய்யும்
சேர்த்தே படி ஏற்றிக்கொண்டு
நுழைந்து பார்த்திருப்பார்
சுளையாக எண்ணிவைத்து
சுமாராக எழுதிக்கொண்டிருக்கலாம்
பத்திரிகையா,கட்செவியா 

எப்படி அழைப்பது என்று
 திட்டமிட்டுக் கொண்டிருந்திருக்கலாம்
தானாய் இடிந்தபோது பாதி
தள்ளி வெடித்தபோது மீதி
புகைந்தது வாழ்வு
#மவுலிவாக்கம்



அளவிலா விளையாட்டுடையான்

மிளகாய்த்தூள் அளவான காரமாகவும்
உப்பு அளவான கரிப்பாகவும்
புளி அளவான புளிப்பாகவும்
சர்க்கரை அளவற்ற இனிப்பாகவும்
அமைந்திட அருள்வாய் எம் தந்தையே
அப்படியே தண்ணீரும் அளவான அளவாக எடுக்கவும்
அளவுகளோடு பிறந்து அளவாக வளர்ந்து
அளவாகப்பேசவும்
அளவாக சமைக்கவும் அருள்வீராயின் 

அளவற்ற நன்றி உடையவளாகிடுவேன்
அளவிலாத்துயர்களையும்
அளவிலா உளறல்களையும்
அளந்துகொண்டிருக்காத உள்ளம் 

இலவச இணைப்பாக அருளுவீராக


வெள்ளி, நவம்பர் 04, 2016

படைப்பு

கத்தியில் ஏழுவகை
கரண்டியில் நூறுவகை
தட்டு,தாலம்,ஒட்டிசமைக்க,
ஒட்டாமல் எடுக்க ,
ஊர்சமையல்,உலகசமையல்
முறைக்கேற்ற முன்னூறு எடுப்பு
எல்லாம் வாங்கி எல்லாம் கற்று
எடுத்து வை இரண்டடிசந்தில்
ஓடுங்கால் ஓடி ஒடுங்குங்கால் ஒடுங்கி 

நாடுங்கால்
நல்லவண்ணம் படைத்து
சாடுங்கால் சத்தமின்றி துடைத்து
வாடுங்கால்
வருமானம் தேடி ஓடு ஓடு
அவரவர் வயிறு அவரவர் பாடு
அனைவர் வயிறும் உந்தன் பாடு


விடமுண்ட கண்டன்

ஆரஞ்சு நிறத்திலான கேசரித்துண்டுகள் 
விருந்தினரை,
வீட்டுக்குழந்தைகளை,
கட்டிகளின்றி கிளறிமுடித்தவளை
என எத்தனை பேரையோ 
பரவசப்படுத்திய காலத்தில்
புறப்பட்டோம்.
அதிகபட்ச உபசாரத்தின் அடையாளமான 

கேசரித்துண்டுகள் மஞ்சள் நிறம்
உற்ற காலை
நாம் கொஞ்சம்
அந்த நிறப்பொடி போலக் 

கொஞ்சமே கொஞ்சம் திடுக்கிட்டோம்.
மூடநெய்பெய்து முழங்கை வழிவார 

சர்க்கரைப்பொங்கல் தின்று சலிப்புற்ற சாமியெல்லாம்
கேசரித்துகள்களில் பசியாறத் தொடங்கியபோது
நமது உலகம் வண்ணமயமாகிவிட்டது
குட்டி குட்டி குப்பிகளில் நிறைந்த
வாசனாதி திரவியங்களும் பொடிகளுமாக 

பொங்கும் நிறங்களில் படைக்க விரும்புகிறோம்.
கேசர்பாதாம்,பிஸ்தா பச்சை,

வாடாமல்லி வண்ணங்களில் ததும்பும் 
பண்டபாத்திரங்களைப் பார்த்து 
பெருமூச்சு விடாதிரும் ஈசனே
இதிலாவது வண்ணங்களைத் தக்கவைக்கிறோம்.
எல்லாம் ரசாயனம்
எம்மைப்போல் குடல் பெறவில்லை
நீர்



வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...