புதன், நவம்பர் 30, 2011

முரண் (சற்றே பெரிய கவிதை)


வெற்றிக்கு விலாசம்
சொல்லாத
பயணம்..

குறிப்பு ஒட்டிப்
புதையல் தேடுபவன்போல் 
சந்துகள் தாண்டிய 
பொந்துக்குள் 
தலையோடு கால் போர்த்தியவன் 
குறட்டையி ல்  குறுக்கிட்டு 
கைகுலுக்கிப் புன்னகைத்தது 
வெற்றி...
அவனுக்கு 
அதையும் 
தன்னையும்  அடையாளமே புரியவில்லை...
முகங்கழுவி வா...
தேநீர் பருகி
விரிவாய்ப் பேசலாம்
என
ஒட்டுத்திண்ணையில்
கால்மடித்துகாத்திருக்கிறது 
வெற்றி!
***********************************

தன்னை சந்தித்தாக வேண்டியது 
வெற்றியின் விதி 
எனக் கிளம்பினான் இவன் ....

தெளிவாக 
முழுப்பெயர் (தலை எழுத்தோடு)
கதவு எண்< தெரு<நகரம்>வட்டம்
மாநிலம்<அஞ்சல்குறியீடு 
அலைபேசி எண் _உட்பட 
முழுமுகவரி தந்திருந்தான்...
எதற்கும் இருக்கட்டும் என 
மின் அஞ்சல் முகவரிகூட...

புன்னகையோடு காத்திருந்தவன் 
ஊர்ப்பக்கம்
வெற்றியின் நிழலே.......
....................................காணோம்
உறுதியான ஆவலில்
பரிமாறத் தயாரான விருந்து
ஊசத்தொடங்க
வாத்தியக்குழு தூங்கிவழிய
மாவிலைத் தோரணம்
வாடியுதிரச் சகியாது
விசாரித்தான்.....
வெற்றி
துளியும் அறியாப் புதியவன்போல்
விளக்கம் சொல்லாமல்
அவனை
வெறிக்கின்றது !
மஞ்சள் செம்பருத்தி 


அவனுக்கும் 
மனிதன் 
என்றுதான் பெயர்....

மஞ்சளாய்ப் பூத்தாலும் 
மஞ்சள் செம்பருத்தி 
என்று அழைப்பது போல்...
                                           *   *************
பசித்த வயிற்றின்
எரிச்சல் உணராதவனும்
ஆடைக்கிழிசலின் 
அவமானம் உணராதவனும் 
ஏக்க விழிக் குழந்தையின் 
சடைத்தலைக்கு 
சலிப்பவனுமான 
அவனுக்கும் 
மனிதன் 
என்றுதான் பெயர்...... 
        

செவ்வாய், நவம்பர் 29, 2011

சும்மா இரு...

நிறமற்ற மண் மீது
பெருவெளிச்சம்
படரப் படர ....
சோம்பல் முறித்து
நிமிரும் கிளைகள் ...

கிளை இடுக்கு நீரை
பறவை உலுக்க
சிறுமழை...
திடுக்கிட்டு
அண்ணாந்த வேருக்கு
அருகிலமர்ந்து
சமாதானம்  சொன்னது
இணைப்பறவை.....

ஈரச் சிறகை உதறி உதறி
இடம் மாறி
வெயில் காய்ந்து
"இப்ப எங்க போனே...
வம்பு பேச மழை தேடியது
முதற்பறவை ....

:சும்மா இரு
அலகால்  ஆகாயம் திறந்தால்
இரை தேடல்  இம்சை
கடிந்தது இணைப்பறவை .... 

தேய் பிறை அச்சம்




.

 பிடித்தபாடல்  
அலைபேசி அழைப்பில்
பதிய வேண்டாம்

அழைப்பின் போதெலாம்
ஒலித்து ஒலித்து
நம்
பிடிப்பு கரையலாம் ....

சமயா சமயமின்றி
ஒலிக்கும் பாடலை
கோபமாய் எரிச்சலாய்
நிறுத்த நேரலாம்

முழுமையாய்க் கேளாமல் 
உடனே எடுக்க 
திரையில் ஒளிரும் பெயர் 
நிர்ப்பந்திக்கலாம் 

புதிய எண் பார்த்து
யோசிக்கும் மனதுக்கு 
பாடல் எட்டாமலே போகலாம்...

இடம் பொருள் கருதி 
நாமே மென்னி திருகி 
அமைதிப்படுத்தலாம் 

இந்தப்பாடல் 
எதற்கென்ற 
விளக்கவுரை கேட்டு 
யாரும் நிர்ப்பந்திக்கலாம் 

புதன், நவம்பர் 23, 2011

வாடகை வீடு(நினைவுகள்  சொந்தம்)


எப்படித்தான் இருந்தீங்களோ
பழைய வீடு ....
கரிசனமாய் நண்பர்!


அழுக்கு சுவர்
ஈரம் ஊறும் மூலைகள்
எத்தனை ஓவர் எத்தனை பந்து
கணக்கறிந்து
கொக்கியிலாது  ஆடும்
ஜன்னல் கதவின் லயம்
மழையோடு மல்லு க்கட்டும்
கதவுக்கான நுட்பங்கள் 
மாற்றி மாற்றி 
மஞ்சள் வட்டம் பூசிய 
சாமி அலமாரியில் 
படிந்திருக்கும் வேண்டுதல்கள் 
எந்த பாத்திரம் 
எந்த நேரம் 
எப்படி ஒலிக்கும் 
எல்லாம் தெரிந்த சமையல் மேடை 
(சமயத்தில் உணவு மேசை )
உள்ளக்கிடக்கைஎல்லாம் 
சொல்லியபடியே 
ஒட்டி உறவாடிய 
அடுப்பு மேடை .....

அவிழ்க்காது விட்ட கொடிக்கம்பி 
துவைத்த துணி அளவும் 
போனதும் ஒட்டிய 
நடுக்கதவின் பாரதி 
வெள்ளையடிக்கா வருடங்களையும்
உப்பு ஊறிய கரிச்சுவர் 
சுவைத்திருந்த உணவையும் 
சொல்லும் சாட்சிஎன்றான்
புது வீடு ரசிக்கா 
சின்ன மகன் ....

எப்படித்தான் இருந்தீங்களோ 
நண்பரின் கூற்றுக்கு 
சிரித்துவைத்தோம்.    

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...