திங்கள், மே 28, 2012

குறுஞ்சிரிப்பு


மே25 வல்லமை மின்னிதழில்

விரைந்து கொண்டிருந்த
வாகனத்தை
ஓரம் நிறுத்தி
அவசரமாக
அலைபேசி எடுத்தான்....
உதடுவிரிந்த புன்னகையொன்றைச்
சிந்தினான்
எதையோ வாசித்து .....
தனித்த புன்னகையின்
கூச்சம் உணர்ந்து
வேகமெடுத்துப் போய்விட்ட
அவனை மகிழ்வித்த
குறுஞ்செய்தி
நண்பனின் கிண்டல்?
காதலியின் பகிர்வு?
ஏதேனும் வெற்றி ?
என் கேள்விக்கு
விடை சொல்லத் தெரியவில்லை
பாதையோரம்
சிந்திக் கிடந்த
அவன் புன்னகைக்கு....

சனி, மே 19, 2012

அவன் பார்க்கக் கூடாத கதவு

மே16 சொல்வனம் மின்னிதழில் 
திறக்கப்போவதில்லை 
என்ற தெளிவின்றிப் 
பூட்டப்பட்ட கதவு அது.

யாரேனும்
முன் வந்தால் -
திறக்கத் தோதாக
நிலையின்மேல் சாவி கூட
இருக்கிறது.
இந்த வளைவுகளையும்
கொண்டிகளையும்
செதுக்கி கோர்த்தவனுக்குத்
தெரியாது,
உரிமையாளனின்
ஆன்மாவை -அதில்
தொங்கவிடப் போவது…
அந்த வளையம் ,
அழுத்தமாகத் தாழிடத்
தோதாக -தன்னை
இழுத்துப் பிடித்துக்கொள்ளும்
விரல்களின்
ஸ்பரிசத்துக்காகவே
காற்றில் அசைந்து அசைந்து
முனகுகிறது.
வீடுமறந்து
அயல்மண்ணில் நிலைகொள்ள
முயலும்
தோழன் கண்ணில்
படாதிருக்கட்டும்
இந்தக் கதவின் படமும்
என் வரிகளும்…..

தேவை தேவதைப் பிறவி



மாங்கல்ய வரம் நாடிக் 
கயிறுகளையும் ,
பிள்ளைப் பேறுவேண்டி 
தொட்டில்களையும் ,
வளையல்களையும்,
முணுமுணுக்கும் உதடுகளோடும் ,
கரையுடையத் துடிக்கும் 
விழிகளோடும் 
கட்டிக் கொண்டிருந்த 
பழக்கத்தில் 
தொங்கவிடுகிறோம்
தேவதை உடைகளை....
இறுக்கம் உடைக்கவும் 
எங்கும் உலவவும் 
வேண்டி 
இந்த வேண்டுதல்!
உற்றுப் பாருங்கள்...... 
உங்கள் வீட்டு 
முருங்கையில் கூட 
ஒன்றிரண்டு தொங்கலாம்.
ஆகிவந்த மரமென்று 
அடுத்தவரும் கட்டலாம்.....

செவ்வாய், மே 15, 2012

நான் பொழிந்த புனல்

மே 14  உயிரோசையில் 

உள்ளங்கை குவித்து
ஏந்தி வந்தேன் 
என் வீட்டுக் கிணற்றுநீர்..
பிரியா விரல்களூடும்
கசிந்த நீர் போக 
மீதம் சொரிந்தேன் 
ஒரு நுரை ததும்பிய 
பேராற்றில் .....
இன்றைய வண்டலில் 
அந்தத் துளிகளைத் தேடித் 
தோண்டிக் கொண்டேயிருக்கிறேன் 
ஒரு ஊற்று....
நானும் புதைந்திருக்கும் 
அதன் மேல் நின்று 
நக அழுக்கு சுட்டி 
சிரிக்கும் 
நீ 
கொண்டிருக்கிறாய் 
புதுப் புனல் நாள் குறித்த 
நம்பிக்கையை...

ஞாயிறு, மே 13, 2012

கறை படிந்த பாய்

 

மே 14  வல்லமையில்

இடுப்பு தரிக்கா காற்சட்டைக்கு 
அரைஞாண் கயிறுக்
காப்பு..
முறுக்குவாளியில்
மட்டுமன்றி 
கடுகுடப்பி சில்லறையிலும் 
வைத்திருப்பாய் என் தீனி...
பால்காசு,
பயிறெடுப்பு...
உன் 
எல்லா வரவிலும் 
என் செலவு...
அழுக்குப் படிந்த 
உன் மஞ்சள் கயிறு 
நினைவிலாடுகிறது 
இந்த அடையாள அட்டையை 
தொங்கவிடும்தோறும்.....
வெடிப்புகளுக்கு இட்ட 
மஞ்சள் விளக்கெண்ணையால் 
கறை படிந்து போன 
உன் பாயைப் பார்ப்பதுண்டு 
அம்மா 
அந்தி வானத்தின் நிறக்கலவையில்...  

அம்மாவும் கைபேசியும்

 

குரலின் பலவீனமும் 
வெடிப்பும் மறைத்து 
கோபம் காட்டவும் ,
யார் யாருக்கோ 
யாருக்கோ யாரோ 
அனுப்பிய 
தத்துவ விள்ளலை 
உன் 
நாவிலும் கரைக்கவும் ,
நற்காலை,நல்லிரவு,
பத்திரம் ....
முகமன்களைப் பகிரவும் 
முடியாவிட்டால் போகிறது ...
பச்சை பொத்தான் 
அழுத்தி,
"ஏம்பா சாப்பிட்டியா..."
என நீ 
தொடங்கும் தோறும் 
அறிவியல் வாழ்கிறது 
அம்மா...!

சனி, மே 12, 2012

பூட்டாத பூட்டுக்கள்


 May 11,வல்லமையில் 

பூட்ட ஏதும் 
பொருளிலாத போதும்
பூட்டிச் செல்வது 
வழக்கத்தின் காரணமாய் 
நிகழ்கிறது.
கதவைத் திறக்கும்போது 
ஞாபகமாய் 
மனசைப் பூட்டிக் கொள்ள 
வேண்டியிருக்கிறது …..
உள் சுவர்களெங்கும் 
பிறர் அறியாப் 
பூட்டுகள் 
தொங்கிக்கொண்டே இருக்கின்றன …..
தேவைக்கேற்ப 
அவரவர் 
எடுத்துக் கொள்வதுண்டு 
சிலசமயம் 
தனக்கு….
சிலசமயம் 
பிறர் வாய்க்கு….
பலசமயம் விஷயங்களுக்கு ….
எப்போதும் கனவுகளுக்கு

 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...