வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

உலரும் மை


காணாமற் போனவன் குறித்து 
புகார் தருகையில்                                                     
கேட்டார்கள் ....
அவன் என்ன ஆடை உடுத்தியிருந்தான்?
அது நீலததின் சாயலா?
பச்சையின் சாயலா?
கோடு-நீலததில் பச்சையா?
பச்சையில் நீலமா?
அதை அணிந்து 
அவர் பார்த்தார்-
மாற்றிப் போனானோ...?
அவன் காணாமற் போனது...
அப்போதா?-எப்போதோவா?

சுழலும் கேள்விகளின் 
விடை மனதிற் படியாமல் 
திறந்த பேனாவோடு 
அமர்ந்திருக்கும் தந்தைக்கு 
நீங்கள் உதவ முடியுமா?
அந்தப் பேனாவின் 
மை 
உலர்ந்து கொண்டிருக்கிறது.

சனி, ஆகஸ்ட் 25, 2012

வாழ்வின் தருணங்களை எழுப்புதல்



ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு 
வர்த்தக வளாகம் 
எது வேண்டுமானாலும் 
எழுப்புங்கள்...
தனிமனைகளாகக் கூடப் 
பிரிக்கலாம்.
நோக்கம்போல் செய்யுங்கள்....
சுவரொட்டி ,ஒலிபெருக்கிப் பாடல்கள்,
தட்டிப்படங்கள்,துண்டு விளம்பரங்கள்                   
கோலாகலத் தோரணங்களை 
விலக்கி நுழைவதும்,
கட்டி இறங்குவதுமான உற்சாக முகங்கள்...
வியர்வை ,கசங்கல்,காத்திருப்பு,
தள்ளுமுள்ளு தாண்டி...
கண்ணீரும் புன்னகையும் 
கைத்தட்டலும் சீழ்க்கையுமாய் 
யார் யார் வாழ்வையோ 
அங்கீகரித்த பொழுதுகள் 
அந்த கிழிந்த திரைக்கு 
கீழும் ,
உடைந்த இருக்கைகளின் ஊடேயும் 
உறைந்து கிடக்கின்றன ....
அவற்றை தக்க முறையில் 
அடக்கம் செய்துவிட்டு 
மூடிக்கிடக்கும் 
பழைய திரையரங்கை 
நோக்கம் போல் மாற்றிக்கொள்ளுங்கள் ...
தினமும் காட்சி தொடங்குமுன் 
ஒலித்த 
பழைய பாடலின் எதிரொலி 
தொடர்நதால்
பயப்பட  வேண்டாம் 
மணி அடித்ததும் நின்றுவிடும் 

திங்கள், ஆகஸ்ட் 20, 2012

உன்னோடு போனது துக்கம்



எந்த வீட்டிலும்
பிலாக்கணம் பாடவும் 
எந்தச் சாவிலும் மாரடிக்கவும் 
முன்னே முன்னே போகும் 
அலமேலு ஆத்தா
வாய் கோணிச் செத்தாள்... 
சாராயக் காசு வாங்க 
ஆளில்லாக் கவலையில் 
மகனும்,
சிறுவாட்டு இருப்பு சொல்லாது 
பொசுக்கென்று போன கவலையில் 
மருமகளும்...
வாசல் பெருமாளைப் பட்டினி 
போட வேண்டாமென 
அழுகையை ஒத்தி வைத்தது 
தெரு சனம்..


சனி, ஆகஸ்ட் 18, 2012

எழுதப்படாத நாட்குறிப்பேட்டின் பக்கங்கள்



 வெற்றுவரிகளுக்குள் 
வலி, துரோகம், காமம், 
காதல்,இழப்பு,
சுவாரஸ்யம்,பிரார்த்தனை 
சகலத்துக்குமான 
எழுத்துக்கள் -மனமொழியில்...
நீ கோடுகளாகப் பார்க்கும் 
பக்கங்களுக்கிடையேதான் 
ஆண்டின் மகாநதி 
சலசலத்தபடி ஓடுகிறது 
இதோ பார்...
என் கையின் ஈரம்... -- 

வெள்ளி, ஆகஸ்ட் 10, 2012

போதனை


கனவுகள் 
இறைந்து கிடக்கும் 
பால்யத்தின் வீதி...
நம்பிக்கையின் 
பொம்மையாக 
நடக்கும் புத்தன்கள்
போதிக்கிறார்கள் 
நம் பால்யத்தின் 
பெருமதிப்பை  

ஞாயிறு, ஜூலை 29, 2012

கனவு நிறுத்தம்


   
ரோஸ்நிற சக்கரங்களும்,
மஞ்சள்,பச்சைநிற இருக்கைகளும்,
கைப்பிடியில் தொங்கும் 
சிவப்புக் குஞ்சலமுமாக 
புல்வெளிகளில் அலையவும் 
மைதானத்தில் வட்டமிடவும் 
முதுகு வளைத்து 
சாலையில் போட்டியிட்டு 
விரையவுமான 
கற்பனையிலிருந்து -அப்பு 
வெளிவந்தபோது 
சைக்கிள் பொம்மை விற்ற 
சிக்னலிலிருந்து
வெகுதூரம் வந்திருந்தது 
பேருந்து.
சிக்னல் பொம்மைகள்
கடையில் விற்பதில்லை 
கிடைக்கும் 
கடைகளுக்கு 
அம்மா போவதில்லை.              

சனி, ஜூலை 21, 2012

ஆடுகளம்


    
தொடக்கத்தில் 
பரத புஷ்பாஞ்சலி ,
பின் 
சற்றே கதகளி
கொஞ்சம் மோகினியாட்டம் 
அதன்பிறகுதான்...
அற்புதம்.
பறந்து பறந்து 
பாலே ....
தாவியும் ,மிதந்தும் 
அலைந்துவிட்டு ,
இப்போது 
கம்பியைப் பற்றி உந்தி 
முகம் பதித்துத் 
தொங்கிச் சிரிக்கும் 
சிறுவனாகி விட்டது 
யாரோ கட்டி,
அறுந்து ,
மிச்சமிருந்த கட்சித் தோரணம்.

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...